Buzz Aldrin: நிலவில் கால்பதித்த ஆல்ட்ரினுக்கு 93 வயதில் 4வது திருமணம்!
நிலவில் கால்பதிப்ப இரண்டாவது மனிதரான பஸ் ஆல்ட்ரின் தனது 93 வயதில் 63 வயதாகும் தனது காதலியை மணம் முடித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 1969ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலத்தில் பயணித்த மூவரில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின். இவருடன் மைக்கேல் காலின்ஸ், நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரும் அந்த விண்கலத்தில் பயணித்தனர்.
இந்தப் பயணத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால்பதித்தார். இரண்டாவதாக நிலவில் கால் பதித்தவர் ஆல்ட்ரின். அப்பல்லோ 11 விண்கலப் பயணத்தில் இடம்பெற்றவர்களில் மற்ற இவரும் இப்போது உயிருடன் இல்லை. ஆல்ட்ரின் 93 வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
சனிக்கிழமை தனது 93வது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், 63 வயதாகும் தனது நீண்டகால தோழி டாக்டர் ஆன்காவை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். லாஸ் ஏஞ்செல்ஸில் எளிமையான முறையில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளது. இது ஆல்ட்ரினின் நான்காவது திருமணம் ஆகும்.
இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆல்ட்ரின், “ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடியைப்போல உற்சாகமாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பஸ் ஆல்ட்ரின் 1971ஆம் ஆண்டு நாசா பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பின் ஓராண்டுக்கு பைல்களுக்கு பயிற்சி அளிக்கும் பள்ளியில் தலைவராக இருந்தார். சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றையும் நிறுவிய ஆல்ட்ரின் இதுவரை ஒன்பது நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.