அறிவியலுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்று முடிவுகட்டிவிடக் கூடாது: சத்குரு பேச்சு
அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்துக்கு பயன்பட இன்னும் விரிவான பரிமாணத்தில் அதனை அணுக வேண்டும் என சத்குரு தெரிவித்துள்ளார்.
அறிவியலுக்கு எட்டாத எதுவும் இல்லை என்று முடிவு செய்யக்கூடாது என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கூறியு்ள்ளார். ஹார்வர்ட் மெக்கல் ஸ்கூலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் ஸ்டீவன் பிங்கருடனான உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் சாண்டர்ஸ் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்குரு கலந்துகொண்டார். அறிவியல் மற்றும் ஆன்மிகம் தொடர்பான உரையாடலாக அமைந்த இந்த நிகழ்ச்சி அக்டோபர் 26ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது, நவீன மற்றும் யோக அறிவியல், ஆன்மீகம், உணர்வுகள் மற்றும் அற்புதங்கள் போன்ற பல அம்சங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற உளவியலாளர் ஸ்டீவன் பிங்கருடன் சத்குரு கலந்துரையாடினார்.
"நாம் பிரபஞ்சத்தை ஒரு டிரில்லியன் பகுதிகளாகப் பார்த்தால், அது குழந்தைத்தனமாக இருக்கும். ஒவ்வொரு சில பகுதிகளையும் சேகரித்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கும். அதிலிருந்து மற்றொரு சித்திரத்தை உருவாக்கலாம். படைப்பின் இறுதித் தன்மையை நாம் அணுக முயல்வது இதுதான்" என்று சத்குரு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அறிவியலின் உண்மையான பலன்கள் வசதிகளுக்கானதாக மட்டும் இல்லாமல், மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கு பயன்படும் வகையிலும் இருக்க வேண்டும். அதற்கு அறிவியல் முன்னேற்றங்களை இன்னும் விரிவான பரிமாணத்தில் அணுகுவது அவசியம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.