சவுதி அரேபியா ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் கோரிக்கையை புறக்கணித்து வருகிறது என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் முகமது குரோஷி ஆதங்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கோரி வரும் நிலையில் அதை முற்றிலுமாக சவுதி புறக்கணித்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 5 நாட்களில் இவரை இரண்டாவது முறையாக முகமது குரேஷி சவுதி அரேபியாவை விமர்சித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை நீடித்து வருகிறது, கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உடனே திரும்பப் பெறவேண்டும் எனவும், சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எச்சரித்து வருகிறது. அது மட்டுமின்றி சர்வதேச நாடுகள் இதில் தலையிட வேண்டும் எனவும் அந்நாடு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சீனாவின் உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை ஐநா மன்றம் வரை கொண்டு சென்று சர்வதேச  பிரச்சனையாக்க முயன்று அது தோல்வி அடைந்துள்ளது. 

அதேபோல் ஆரம்பத்தில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முயற்சித்த அமெரிக்கா, காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை என்பதால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அதைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி விலகிக்கொண்டது. ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இதே கருத்தை முன் வைத்துள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் உள்ளிட்ட 57 இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு  என்ற அமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

 ஐநா மன்றத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு செயல்பட்டு வருவதால், பாகிஸ்தான் அதை  இந்தியாவுக்கு எதிராக திசை திருப்ப முயற்சித்து வருகிறது. எனவே  காஷ்மீர் விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சவுதி அரேபியா தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா முகம்மது குரேஷி, வேண்டும் என்றே சவுதி  அரேபியா பாகிஸ்தானுக்கு உதவி செய்ய மறுத்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளையும், சவுதி புரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகே அந்நாடு எங்களது கூட்டாளி என்று நாங்கள் கருதமுடியும், 

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் தலையிட வேண்டும் என்று நாங்கள் ஒரு வருடமாக கோருகிறோம். ஆனால் சவுதி அரசாங்கம் ஒவ்வொருமுறையும் அதை நிராகரித்து வருகிறது எனக் கூறியுள்ளார். இதேபோல் மற்றொரு பேட்டியில் சவுதியை விமர்சித்த, குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் சவுதியின் உதவியின்றி பாகிஸ்தானால் செயல்படமுடியும் என்றும், பாகிஸ்தான் மற்ற இஸ்லாமிய நாடுகளுடன் ஒரு புதிய அமைப்பை உருவாக்க முடியும் என்றும் அவர் சவுதி அரேபியாவை எச்சரித்துள்ளார். குரோஷியின் இந்த கருத்தால் சவுதி அரேபிய அரசு பாகிஸ்தான் மீது மிகவும் கோபமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல் இந்த வாரம் நடந்த ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் முயன்றது, அதில் அங்கம் வகிக்கும் ஐந்து நிரந்தர நாடுகளில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. மற்ற நாடுகள் ஆதரவு வழங்கவில்லை. அதேபோல் சவுதி அரேபியாவிடம் வாங்கிய கடனை சீனா கொடுத்த நிதி உதவியின் மூலம் திருப்பிக் கொடுத்துள்ளதாகவும், குரேஷி ஒப்புக் கொண்டுள்ளார்.