கொரோனா வைரஸை எதிர்த்து ஒட்டுமொத்த உலகமும் போராடிவரும் நிலையில் ,  இந்த வைரசுக்கு  எதிராக தங்கள் நாட்டில் 47 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக  ரஷ்யா அதிரடியாக அறிவித்திருந்த நிலையில் நோயாளிகளுக்கு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு சிறந்த மருந்து தயாராகி விட்டதாகவும் அதை அதிகாரப்பூர்வமற்ற முறையில் பரிசோதித்ததில் அந்த மருந்து மனிதர்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படுத்தவில்லை எனவும், இது சிகிச்சைக்கு உகந்த மருந்து எனவும்  ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  கொரோன வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தில் 97 ஆயிரத்தை கடந்துள்ளது . இதுவரை இந்த வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது . கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 

உலகம் முழுவதும் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உலகளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்து ரஷ்ய நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டின்  துணைப் பிரதமர் டட்டியானா கோலிகோவா, ரஷ்யாவில் மொத்தம் 47 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக 3.1 பில்லியன் ரூபிள், ( 43 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதில் சுமார் 14 தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து திறம்பட செயல்பட கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க்  ஒரு மாதகால சோதனைக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் மாதத்தில்  ரஷ்யாவில் ஒரு தடுப்பூசி தயாராகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் , தற்போது கொரோனா வைரசை எதிரித்து சிறப்பாக போராடும் மருந்து அதிகாரபூர்வமற்ற ஓரு சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர் .  

தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் தன்னார்வ ஊழியர்கள் மீது கொரோனா வைரஸ் தடுப்பூசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் பரிசோதனை செய்து வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது . அதில்  தாங்கள் தயாரித்த புதிய மருந்தால் 'யாருக்கும் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை . "தடுப்பூசியை தங்களுக்குள் பரிசோதித்தவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மற்றும் பணியிடத்திலும் வீட்டிலும் தங்கள் கடமைகளை முழுமையாகச் செய்து வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக அமைச்சகத்திடம் அனுமதியைப் பெற்றுவுடன் இந்த பரிசோதனையை  முழு வெற்றி அடைந்ததாக கருதுவோம் ,சுகாதார பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை நிறைவு செய்து விரைவில் நாட்டிற்கு அற்பணிப்போம் என உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.