உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, ரஷ்ய அதிபர் புடினை 'பைத்தியம்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். 

உக்ரைனுக்கு எதிராக மாஸ்கோ பயங்கர ட்ரோன் தாக்குதலை நடத்தியதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை "பைத்தியம்" என்று அழைத்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே போர் கைதிகள் பெரிய அளவில் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்னரும் இது நிகழ்ந்துள்ளது.

ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 13 பேர் பலி:

உக்ரைன் மீது ரஷ்யா பெரிய அளவில் ட்ரோன் தாக்குதலை நடத்தி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடின் ஒரு பைத்தியம்; டிரம்ப் விமர்சனம்:

"ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருந்தது, ஆனால் அவருக்கு ஏதோ நடந்துவிட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்!" என்று டிரம்ப் தனது சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். "அவர் உக்ரைனை முழுவதுமாக விரும்புகிறார், அதன் ஒரு பகுதியை மட்டும் விரும்பவில்லை என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். ஒரு வேளை சரியாக இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்!" என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்கோ மீது பொருளாதார தடைகள்:

கீவ் உடனான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியில் டொனால்ட் டிரம்ப் பேசி இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. உக்ரைன் மீதான சமீபத்திய தாக்குதல்களால் தான் மிகவும் கவலையில் இருப்பதாகவும், மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது குறித்து "முற்றிலும்" பரிசீலித்து வருவதாகவும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். "புடினை நான் நீண்ட காலமாக அறிந்திருக்கிறேன். எப்போதும் அவருடன் பழகுவேன், ஆனால் அவர் நகரங்களுக்குள் ராக்கெட்டுகளை அனுப்பி மக்களை கொன்று வருகிறார். அது எனக்குப் பிடிக்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பயங்கரவாதம்

தலைநகரான கீவ் உட்பட, தொடர்ந்து இரண்டாவது நாளாக உக்ரைனில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டது. சமீபத்திய ரஷ்ய தாக்குதல்களில் வடமேற்குப் பகுதியில் எட்டு பேர் மற்றும் 12 , 17 வயதுடைய இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கருத்து

"ரஷ்ய தலைமையின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் இல்லாமல், இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது" என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். "அமெரிக்காவின் மவுனம் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களின் மவுனம் புடினை ஊக்குவிக்கிறது. தடைகள் நிச்சயமாக உதவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெலென்ஸ்கி மீது டிரம்ப் கோபம்

டிரம்ப் தனது கோபத்திற்கு அடிக்கடி இலக்கான ஜெலென்ஸ்கியை விமர்சித்துள்ளார். "ஜெலென்ஸ்கியின் பேச்சு சரியில்லை. இதனால் அவரது நாட்டுக்கு தான் எதுவும் செய்யவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ''அவரது வாயிலிருந்து வரும் அனைத்துமே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. எனக்கு அது பிடிக்கவில்லை. அதை நிறுத்துவது நல்லது" என்று ஜெலென்ஸ்கியை டிரம்ப் விமர்சித்துள்ளார்.

ரஷ்யா மீது தடைகளுக்கு ஜெர்மன் அழைப்பு

ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுலும் ரஷ்யாவின் தாக்குதல்களைக் கண்டித்தார். "புடின் அமைதியை விரும்பவில்லை, அவர் போரை தொடர விரும்புகிறார், இதை நாம் அனுமதிக்கக்கூடாது," என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த காரணத்திற்காக ஐரோப்பியா தரப்பில் இருந்து மேலும் பல தடைகளை பரிசீலிக்க இருக்கிறோம் என்று ஜெர்மன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் அதிரடி ட்ரோன் வீச்சு

ஞாயிற்றுக்கிழமை ஒரே இரவில் மொத்தம் 45 ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் 266 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனின் ராணுவம் கூறியுள்ளது. விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், 298 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், இது "இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கை" என்றும் கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனும் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன்களை ஏவியது. இதனால், மாஸ்கோ விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன், ரஷ்யா கைதிகள் பரிமாற்றம்:

கீவ் பிடித்து வைத்திருந்த அதே எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்களுக்கு பதிலாக, மேலும் 303 உக்ரைன் போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டதாக ரஷ்யா கூறி இருந்தது. இந்த நிலையில்தான் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி இருக்கிறது. மே 16 அன்று இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது கைதிகளை விடுப்பது என்று இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.