பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு பொதுமக்களை மட்டும் பாதிக்கவில்லை, வெளிநாட்டு தூதரகங்களையும் பாதித்துள்ளது. தூதரகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதற்கு ரஷிய அரசு கடும் கண்டனம் ெதரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் முறையான பதில் அளிக்காவிட்டால் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷியா அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு அயல்நாட்டு தூதரகங்களுக்கும் பொருந்தும். வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே தூதரகங்கள் ரொக்கமாக பணம் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது.

இந்த விதிமுறைக்கு ரஷிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் கடாகின் இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வங்கியில் இருந்து தூதரகங்கள் பணம் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த பணம் வாரம் முழுவதற்கும் தூதரகச் செலவுக்கு போதுமானதாக இருக்காது. ஊழியர்களின் ஊதியம், நடைமுறைச்செலவுகளுக்கு கூடுதல்பணம் தேவைப்படும்.

எங்களின் கோரிக்கைக் கடிதத்துக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முறையான பதிலுக்காக காத்திருக்கிறோம். இல்லாவிட்டால்,ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள இந்தியத்தூதரகத்துக்கு சம்மன் அனுப்பி, இதை நடைமுறையை அங்கு செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்தில் ஏறக்குறைய 200 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியதூதரகத்தின் கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு சார்பில் எந்தபதிலும் அளிக்கப்படவில்லை.

ரஷியா மட்டுமல்லாது, உக்ரைன், கஜகஸ்தான் நாட்டு தூதரகங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.