Russia Ukraine War: கடவுள் இருக்கிறார்.. ரஷ்யா விலை கொடுத்து தான் ஆகும்..உக்ரைன் அதிபர் ஆதங்கம்..
Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனவும் கடவுள் தண்டிக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய இராணுவ கைப்பற்றி வரும் நிலையில், துறைமுக நகரான கெர்னாஸ்கைக் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ் நகர் ஆகியவை பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
மேலும் கெர்சான் நகரைத் தொடர்ந்து மற்றொரு துறைமுக நகரான மரியுபோலையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. இருப்பினும் கீவ், கார்கிவ், மரியுபோலில் இருந்து உக்ரேனியர்கள் பாதுகாப்பாக வெளியேற 'மனிதாபிமான வழித்தடங்களை' ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட வீடியோவில், "எங்கள் நாட்டின் மீது படையெடுத்ததற்கான விலையை ரஷ்யா நிச்சயம் கொடுக்கும். இழப்பீடு என்றொரு வார்த்தைக் உள்ளது. அதை இப்போதே உச்சரித்துப் பழகுங்கள். எங்களுக்கு நீங்கள் செய்த கொடுமைகள் அனைத்திற்கும் நீங்களே இழப்பீடு தருவீர்கள். ஒவ்வொரு உக்ரேனியருக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டியது வரும் என்று கூறியுள்ளார்.
இப்போதைக்கு நாங்கள் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தைத் தவிர வேறு ஏதுமில்லை. ஆனால், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு நகரையும், ஒவ்வொரு தெருவையும் ஏன் ஒவ்வொரு வீட்டையும் கூட மீட்டமைப்போம் என்று தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து அன்றாட போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனவும் கடவுள் தண்டிக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உள்ள தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி அதிபர் செலன்ஸ்கி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.