Ukraine-Russia War: பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு.. போர்க்கப்பல்களை குவிக்கும் ரஷ்யா..பதற்றத்தில் உக்ரைன்..
Ukraine-Russia War: 8 வது நாளாக உக்ரைனில் தாக்குதலை தொடர்ந்து வரும் ரஷ்யா, கருங்கடல் பகுதியில் ஏராளாமான போர்க்கப்பல்களை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
Ukraine-Russia War: உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. உக்ரைன் தரப்பும் தாங்கள் மிகப் பெரிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக ரஷ்யப் படைகளிடம் இழந்துள்ளதாக உறுதி செய்துள்ளது. பொதுமக்களில் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உயிர்பிழைத்தால் போதுமென உக்ரைன் மக்கள் 10 லட்சம் பேர் இதுவரை அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அதன் படி, உக்ரைனில் கடந்த 24ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. அன்று முதல் தற்போது வரை 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மக்கள் தொகையில் 2 விழுக்காடு மக்கள் 7 நாட்களில் எல்லையை கடந்துள்ளனர். போர் நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிக்கும் என்றும், மிகப்பெரிய விவகாரமாக இது உருவெடுக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது.
இந்த போரில் ரஷ்ய படை வீரர்கள் 489 பேர் பலியானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை 6,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் காயமடையும் ரஷ்ய வீரர்கள் சிகிச்சைக்காக பெலாரஸ் செல்கின்றனர்.இந்நிலையில் 8 வது நாளாக உக்ரைனில் தாக்குதலை தொடர்ந்து வரும் ரஷ்யா, கருங்கடல் பகுதியில் ஏராளாமான போர்க்கப்பல்களை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே போரை முடிவுக்குக் கொண்டு வர, கடந்த திங்களன்று பெலாரஸில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உக்ரைன் தரப்பில் யாரும் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.