Russia Ukraine War: இந்தியர்கள் இதுவரை 17 ஆயிரம் பேர் மீட்பு.. களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை..
Russia Ukraine War: உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்துள்ளனர்.
கார்கீவ் இருந்து இந்தியர்களை வெளியேற்றுமாறு ரஷ்யா தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, இந்திய தூதரகம் உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ்வை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து நடந்தாவது வெளியேறுங்கள் என்று இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் இன்று மூடப்பட்ட நிலையில் கார்கீவ் நகரைவிட்டு இந்திய நேரப்படி 9.30 மணிக்குள் இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உக்ரனைவிட்டு வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தூதரகத்தின் அறிவுறுத்தலின் படி, ஏறத்தாழ 17,000 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர் என்றார்.
இந்திய விமானபடையின் சி-17 விமானமும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இணைந்துள்ளனர். ரோமானியாவிலிருந்து முதல் விமானப்படை விமானம் இன்று நள்ளிரவு டெல்லி வரவுள்ளன. மேலும் 3 விமானங்கள் இன்று கிளம்பவுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரமான, கார்கீவ் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால் அங்குள்ள இந்தியர்களை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அங்கிருந்து நேற்றிரவு, இன்று காலை சில மாணவர்கள் ரயில்கள் மூலம் வெளியேறியுள்ளனர் என்று பேசினார்.
கார்கீவ் மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பாக ரஷ்யாவிடம் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாஸ்போர்டை தவறவிட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற நாட்டவர் உதவி கேட்டால், அவர்களுக்கும் கண்டிப்பாக உதவ தயாராக இருக்கின்றோம். கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க குழுக்களை அனுப்புவது குறித்து அலோசித்து வருகிறோம் என்று கூறினார்.
இந்நிலையில் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எல்லைகளில் உள்ள இந்தியர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்துள்ளனர்.