Russia Ukraine crisis: வெறியுடன் தாக்கும் ரஷ்யா.. மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல்.. 2 பேர் பலி

உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
 

Russia Ukraine Crisis updates

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து உக்ரைனில் 7 வது நாளாக ரஷ்யாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலகம் தீப்பற்றி எரிந்தது.

உக்ரைனுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க உள்ளபோதும் கூட ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாதுகாப்புத்துறை, உளவுத்துறை கட்டடங்கள் அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற ரஷ்யா நேற்றே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற இடங்களில் ரஷ்ய ராணுவம் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. காவல்துறை அலுவலகம், தொலைக்காட்சி கோபுரம் போன்ற முக்கிய இடங்களின்மீதும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு உக்ரைனிலுள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்திருக்கிறது.கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கெர்சன், உக்ரைனின் முக்கிய தொழில் நகரமாகும். சுமர் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20% பேர் ரஷ்ய நாட்டினர் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சைடோமிர் நகரிலுள்ள மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டிடங்கள் மீது ரஷ்ய படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் மருத்துவமனையில் இருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 16 பேர் காயம் அடைந்து உள்ளதாக உக்ரைன் அவசர கால மையம் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios