Russia-Ukraine crisis:அடக்குமுறைக்கு எதிராக தான் போர் செய்றோம்..நாங்க உங்களோட பேச தயார்..இறங்கி வரும் ரஷ்யா..
இரண்டாவது நாளாக உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில்,இந்த விவகாரத்தில் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பேச்சுவார்த்தைக்கு குழுவை அனுப்ப தயார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானம் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது.ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ரஷியாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு ரஷ்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.மேலும் உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்- ல் உக்ரைன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.