Russia-Ukraine crisis; ரஷ்யா-உக்ரைன் பதற்றம் ஆழ்ந்த கவலையளிக்கிறது: ஐ.நா.வில் இந்தியா வேதனை
ரஷ்யா-உக்ரைன் இடையே அதிகரித்துவரும் பதற்றம் ஆழ்ந்த கவலையளிக்கிறது. இந்த பதற்றத்தைத் தணிக்க உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.
ரஷ்யா-உக்ரைன் இடையே அதிகரித்துவரும் பதற்றம் ஆழ்ந்த கவலையளிக்கிறது. இந்த பதற்றத்தைத் தணிக்க உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைப்பிரிவான நேட்டோவில் சேரவிருப்பம்கொண்டுள்ளது. ஆனால், உக்ரைன் நேட்டோவில் சேர ரஷ்யா அனுமதிக்கவில்லை. இதனால் உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரர்களைத் திரட்டி ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர உக்ரைன் நாட்டுக்குள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் பிரிவினருக்கும் ரஷ்யா ஆதரவு தெரிவித்து கொம்புசீவிவிட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே உக்ரைன் நாட்டில் டான்பாஸ் மண்டலத்தில் உள்ள டூனட்ஸ்க், லுகன்ஸ் ஆகிய இரு பகுதியை சுயாட்சிகளாக அங்கீகரித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேற்று அறிவித்தது மேலும்பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஐ.நா.பாதுகாப்பு அவையின் அவரசக் குழுக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி திருமூர்த்தி பேசியதாவது:
ரஷ்யா-உக்ரைன் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக முன்னுரிமை அளி்க்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றம் ஆழ்ந்த கவலையளிக்கிறது. பதற்றத்தைத் தணிப்பதற்காக சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முயற்சிகள் பலன் அளிக்க நாம் இறுதி இடைவெளி தர வேண்டும். பதற்றத்தைத் தணிக்க முத்தரப்பு பேச்சு மூலம் முயற்சி எடுத்தது வரவேற்கக்கூடியது. அதேநேரம் தொடர்ந்து ராணுவ விஸ்தரிப்பையும், எழுச்சியையும் ஏற்க முடியாது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தினரைக் குவிப்பதால் தொடர்ந்து பதற்றம் நிலவுவது ஆழ்ந்த கவலையைத் தருகிறது. இந்தப்பிராந்தியத்தில் அமைதிக்கும்,பாதுகாப்புக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடிமக்களின் பாதுகாப்பும், நலனுக்கும் மிகவும் முக்கியமானது.
உக்ரைனில் பல்வேறு மாநிலங்களில் இந்தியர்களில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். இந்தியர்களின் நலன் மிகமுக்கியம். சுமூகமான முறையில் தீர்வு எட்டப்பட அனைத்து வகையிலும் இந்தியா நடவடிக்கை எடுக்கும்.
சர்வதேச அமைதி, பாதுகாப்பை பராமரிப்பது அனைத்து வகையிலும் முக்கியமானது. இதற்கு ராஜாங்கரீதியில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது உறுதி செய்யப்பட்டு, விரைவாக இரு நாடுகளுக்கு இடையிலான சுமுகமான தீர்வுகொண்டுவருவது உறுதி செய்யப்படவேண்டும்
இவ்வாறு திருமூர்த்தி தெரிவித்தார்