ரஷ்யா உக்ரைன் மோதல்: அமெரிக்காவை பார்த்து பயந்துவிட்டாரா புடின்..?? இது 3 வது உலக போராக வெடிக்குமா.??
அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ராபர்ட் ஷூல்ஸ் கூறுகையில், இதற்கு டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தை பின்னோக்கி பார்க்க வேண்டும், ட்ரம்ப் அவரது அணுகுமுறை காரணமாக அனைத்து நோட்டு நட்பு நாடுகளும் அமெரிக்காவில் இருந்து விலகி சென்றன.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றம் உலகத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. இதை தவிர்க்க தூதரக ரீதியிலான முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஆனால் இதுதொடர்பாக சாமானியர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன, உதாரணமாக ரஷ்ய உண்மையிலேயே உக்ரைனை தாக்குமா? போர் என்ற ஒன்று ஏற்பட்டால் அது எல்லைகளில் மட்டும் நடக்குமா? அல்லது நகரங்களுக்கும் பரவுமா? இந்தப் போரில் மற்ற நாடுகளும் பங்கெடுக்க வாய்ப்பிருக்கிறதா? புடின் ஏன் பிப்ரவரி 20 வரை போரை ஒத்தி வைக்க விரும்புகிறார் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
ரஷ்யா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் மூன்றாவது உலகப் போரின் தொடக்கம் என்றும் கூறப்படுகிறது. நோட்டோ படைகளும் இந்தப் போரில் களமிறங்கியுள்ள நிலையில், மூன்றாவது உலகப் போர் வெடிக்குமோ என்ற பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பற்றிக் கொண்டிருக்கிறது. இதில் என்னதான் நடக்கப்போகிறது என ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்த விவகாரத்தை உற்றுநோக்க தொடங்கியுள்ளன. உண்மையிலேயே உக்ரைன் ரஷ்யா இடையே என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
1.ரஷ்யா உக்ரைனை தாக்க முடியுமா...? தற்போது உக்ரைனின் நிலைமை குறித்து களத்தில் ஆய்வு செய்துள்ள பிபிசி பத்திரிகையாளர் பால் ஆடம்ஸ், போரை இனியும் தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ரஷ்யா போர் தொடங்கினால் அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது. போரின் வீச்சு அதிகரித்தால் சீனா அதை வெளிப்படையாக ஆதரிக்காது என்பதும் புடினுக்கு நன்கு தெரியும். அமெரிக்காநோட்டோ படைகள் ரஷ்யாவுடன் கடுமையான மோதல் ஏற்படக்கூடும். ஆனால் மிகப்பெரிய பொருளாதார சீரழிவை அந்நாடு சந்திக்க நேரிடும், வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கும் வகையில் அரசியல் சட்டத்தை புடின் மாற்றியுள்ள நிலையில், போர் ஏற்படும் பட்சத்தில் நாட்டிற்குள்ளேயே அரசியலில் மிகப்பெரிய விலையை புட்டின் கொடுக்க நேரிடும். இது அவருக்கும் நன்கு தெரியும். அதனால்தான் அவர் தொடர்ந்து மிரட்டல் மட்டுமே விடுத்து வருகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
2. போர் எல்லையில் மட்டும் நடக்குமா? அல்லது நகரங்களுக்கும் பரவுமா?
சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவுக்கு இணையாக உக்ரைன் மிகப் பெரிய நாடாக வளர்ந்துள்ளது. போர் என்ற ஒரு நிலை ஏற்பட்டால் அது எல்லைகளில் மட்டும் கட்டுப்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. காரணம் போரில் அமெரிக்கா நோட்டோ போன்ற சர்வதேச நாடுகளின் ஆதரவையும் உக்ரைன் பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு அழுத்தம் அதிகரிக்க கூடும், அதில் முக்கிய நகரங்களும் தாக்கப்படலாம், உக்ரைனை புடின் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அழிக்க முயற்சிப்பார். அப்போது அது எல்லை கடந்த நகரங்களும் தாக்கப்படும், அதேநேரத்தில் நோட்டோ மற்றும் அமெரிக்காவின் ஆதரவால் இவைகள் தடுக்கப்படக் கூடும், ஏற்கனவே போர் தளவாடங்கள் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் கியோவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ரஷ்யா உக்ரைனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
3. தி வோக் கணிப்பின் படி போர் ஏற்பட்டால் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள்..? இந்த கேள்வியை மிகவும் முக்கியமானது. ஆனால் இதற்கு பதில் அளிப்பது மிகவும் கடினம், 2014 இல் ரஷ்யா உக்ரைனை தாக்கி கிரீமியாவை இணைத்துக்கொண்டது. அப்போதிலிருந்து 14,000 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களும் அடங்குவர். ரஷ்யாவில் 29 லட்சம் ராணுவ வீரர்களும், உக்ரைனில் வெறும் 11 லட்சம் வீரர்களும் மட்டுமே உள்ளனர். போர் ஏற்பட்டால் நிச்சயம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் உயிர்ச்சேதம் மற்றும் உடமைச் சேதம் ஏற்படும். எல்லையை கடந்து அது நாட்டுக்குள் பரவும் பட்சத்தில் அதன் விளைவு இன்னும் மோசமாக இருக்கும். உக்ரைனில் பல நிறுவனங்கள் முன்கள பணியாளர்களாக செயல்பட தயாராக உள்ளன, அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரையில் உக்ரைன் எல்லையில் சரியான திட்டமிடல்களை செய்துள்ளது என்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக தெளிவாகிறது.
4. போர் நடந்தால் எத்தனை நாடுகள் பாதிக்கப்படும்..? பிபிசியின் பால் அடம்ஸ் அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று கூறியுள்ளார். போர் தொடங்கினால் அது ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைக்குள் மட்டும் முடிந்துவிடும் என்பதை கூறமுடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் மிகப்பெரிய தவறு, அதன் தாக்கம் பால்டிக் நாடுகளான லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா, போன்ற நாடுகளுக்கும் பரவக்கூடும். இவை அனைத்துமே மிக அமைதியான நாடுகள், அவைகளின் ராணுவ பலமும் சிறப்பானதாக இல்லை, போர் ஏற்பட்டால் இந்த நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக அமெரிக்கா மற்றும் நோட்டோ நட்பு நாடுகளையே எதிர்பார்க்கும் நிலை உள்ளது. எவ்வாறாயினும் போரின்போது ரஷ்யாவை கட்டுப்படுத்த வல்லமை நோட்டோ, அமெரிக்காவிற்கும், ஐரோப்பா நாடுகளுக்கும் உள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
5. ரஷ்யா நோட்டாவை கண்டு பயப்படுகிறது..? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா..?
பாதுகாப்பு நிபுணர் ரோஷன் பேக் நியூயார்க் டைம்ஸில் எழுதியுள்ள கட்டுரையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கடந்த வாரம் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம் எழுப்பிய கேள்விகள் சரியானவையே, ரஷ்யா தனது எல்லையில் 6 சதவீதத்தை மட்டுமே நோட்டோ நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. இது ரஷ்யாவின் தேச நலனுக்கு உண்மையிலேயே அச்சுறுத்தலா? அதையும் தாண்டி ரஷ்யா S-400 போன்ற ஆபத்தான ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை துருக்கி போன்ற பல நாடுகளுக்கு விற்கிறது. அதாவது அந்த நாடுகளுடனான ரஷ்யாவின் உறவும் சுமுகமாகவே இருந்துவருகிறது. எனவே உண்மையில் புதினின் நோக்கம் சண்டையிடுவதா அல்லது உக்ரைனுக்கு ஊடுருவி தனக்கு ஆதரவான அரசாங்கத்தை அமைப்பதா என்ற கேள்வியும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
6.புட்டின் பிப்ரவரி 20 வரை போரை ஒத்தை வைப்பாரா...? " தி டிப்ளமேட்" வெளியிட்டுள்ள கட்டுரையில், ரஷ்யாவுக்கும் சீனாவிற்கும் நல்ல உறவு உள்ளது. புடின் அரசியல் அமைப்பை மாற்றியமைத்து நிரந்தரமாக அதிபராக இருந்து வருகிறார். சீனாவில் ஜீ ஜின்பிங்கும் அதையே செய்துள்ளார். சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. ஒருவேளை போர் வெடித்தால் பல ஐரோப்பிய நாடுகள் இந்த விளையாட்டு போட்டிகளை புறக்கணிக்கலாம், ஏற்கனவே பல கோடிகளை செலவழித்து சீனா அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் அந்த போட்டி தடைபடும் பட்சத்தில் அது சீனாவுக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும், பாதிப்பையும் ஏற்படுத்தலாம் எனவே தனது நண்பரான ஜி ஜின்பிங்கை கோபப்படுத்தும் அபாயகரமான முயற்சியை புடின் எடுக்க மாட்டார் என நம்பப்படுகிறது.
மறுபுறம் இந்த இடைவெளியை அமெரிக்காவும் நோட்டோவும் இராஜதந்திர ரீதியான தீர்வை ஏற்படுத்துவதற்கும், மறுபுறம் போருக்கு தயார் படுத்துவதற்கும் பயன்படுத்தும். இந்த விவகாரத்தில் சீனாவின் மௌனம் ரஷ்யாவுக்கு ஒரு வலுவான செய்தியை சொல்வதாகவே புரிந்துகொள்ள வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், சீனா எப்போதும் நேரடி மோதலையோ அல்லது போரையோ எதிர்கொள்ளாது அதன் கவனம் முழுக்க முழுக்க பொருளாதாரத்தை நோக்கியே இருக்கும். எனவேதான் ரஷ்ய அதிபர் புடின் இந்த விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படாது என கூறியுள்ளது.
7. புடின் இதில் மிகப் பெரிய தவறை செய்து விட்டாரா.?
இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ராபர்ட் ஷூல்ஸ் கூறுகையில், இதற்கு டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தை பின்னோக்கி பார்க்க வேண்டும், ட்ரம்ப் அவரது அணுகுமுறை காரணமாக அனைத்து நோட்டு நட்பு நாடுகளும் அமெரிக்காவில் இருந்து விலகி சென்றன. பிடன் வந்ததும் நோட்டோவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அனைத்து திசைகளிலும் சீனாவை குறிவைப்பதே பிடனின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாடும் எதிர்காலத்தில் தங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற உணர்வை பெற்றுள்ளன. இந்நிலையில் மீண்டும் நோட்டோ படைகள் அமெரிக்காவின் தலைமையில் அணிவகுக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே புடினை பிடன் எளிதாக எதிர்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். மொத்தத்தில் உக்ரைனை அச்சுறுத்துவதற்கான நடவடிக்கையே இது என்பதை தவிர, இதில் போர் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது.