ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட AIdol என்ற முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ, பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் தடுமாறி விழுந்தது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோ பொதுமக்கள் முன்னிலையில் மேடையிலேயே தடுமாறி விழுந்தது. இந்தச் சம்பவம் அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோ மேடையில் சரிந்து விழும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேடையில் நடந்த விபரீதம் சம்பவம்
திங்கட்கிழமை மாஸ்கோவில் நடந்த தொழில்நுட்ப நிகழ்வு ஒன்றில் AIdol என்று பெயரிடப்பட்ட இந்த ஹியூமனாய்டு (மனித உருவம் கொண்ட) ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. 'ராக்கி' திரைப்படத்தின் இசை பின்னணியில் ஒலிக்க, ரோபோ மிகவும் மெதுவாக மேடையில் நடந்து வந்து, கூட்டத்தினரைப் பார்த்துக் கை அசைத்தது. அடுத்த நொடியே, யாரும் எதிர்பாராத வகையில், ரோபோ தலைகுப்புற விழுந்தது.
ரோபோ கீழே விழுந்ததும் அருகில் இருந்த ஊழியர்கள் உடனே மேடைக்கு ஓடிச் சென்று ரோபோவை இழத்துச் சென்று சரிசெய்ய முயன்றனர்.
ரோபோவை உருவாக்கிய ரஷ்ய ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஐடலின் (Idol) தலைமை நிர்வாக அதிகாரி விளாடிமிர் விதுகின், ரோபோ கீழே விழுந்ததற்கு அதைச் சமநிலைப்படுத்தும் 'காலிப்ரேஷன்' (Calibration) அம்சத்தில் ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
"இந்தத் தவறு ஒரு அனுபவமாக மாறும் என்று நம்புகிறேன்," என்றும் கூறிய அவர், ரோபோவின் சமநிலை அமைப்புகள் சரிபார்க்கப்படும் என்றார்.
எலான் மஸ்க்கின் ஆப்டிமஸ் ரோபோ
எலான் மஸ்க் டெஸ்லா மாநாட்டில் தனது ரோபோவுடன் ஆடிய வீடியோ வைரலானதை அடுத்து, ரஷ்ய ரோபோ விழுந்த இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
டெக்சாஸின் ஆஸ்டினில் நடைபெற்ற டெஸ்லா நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தனது புதிய ஊதியத் திட்டத்தை அறிவிக்கும்போது எலான் மஸ்க் தனது ஆப்டிமஸ் ரோபோவுடன் கொண்டாடினார்.
புதிய ஊதியத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதும், மஸ்க் மேடையில் ஏறி, Optimus என்ற ஹியூமனாய்டு ரோபோவை தன்னைப்போல நடனம் ஆட வைத்து அசத்தினார்.
டெஸ்லா நிறுவனத்தின் எதிர்காலம், Optimus ரோபோவுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது. ஒரு நாள் இந்த Optimus, உற்பத்தி, விநியோகம் மற்றும் தனிப்பட்ட உதவிகளைக்கூடச் செய்யும் என்று மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ரோபோவின் வீழ்ச்சி குறித்துப் பலர் கிண்டல் செய்தாலும், ரோபோட்டிக்ஸ் என்பது கடினமான துறை என்று சில பயனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
