கட்டிடங்களில் X குறி.. பதறவைக்கும் Vaccum பாம்.. மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுகிறதா ரஷ்யா ?
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
கீவ் போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் ‘X’ குறியீடு இடப்பட்டுள்ளது. இந்த குறியீடு ரஷ்ய ராணுவத்தினரால் குறிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குறியீடு உள்ள இடங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்காக இப்படி செய்திருக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், குறியீடு இடப்பட்ட கட்டிடங்களுக்கு கீழ் கியாஸ் பைப் லைன் செல்வதால், இதனை குறிவைத்து தாக்குவதற்காக கூட குறியீட்டிருக்கலாம்.
இதனால், பொதுமக்கள் இதுபோன்ற குறியீட்டுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிட வேண்டும். அல்லது மறைத்து விட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கீவ் நகரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனின் இரு பெரிய நகரங்களான கீவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.
இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரஷ்யா உக்ரைன் மீது ஒக்சிஜனை உறிஞ்சி வெடிக்கும் வேக்கம் (vacuum) குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதுவர் ஒக்சானா மர்கரோவா தெரிவித்துள்ளார்.
“Thermobaric” ஆயுதம் அல்லது உஷ்ண குண்டுகள் என அழைப்பார்கள். இந்த குண்டுகள் வெடிக்கும் போது வெடிக்கும் இடத்தில் உள்ள ஒக்சிஜன் உறிஞ்சப்படும். ஒக்சிஜன் உறிஞ்சப்படும் போது “vacuum”உருவாகும். இதன் காரணமாக இதனை “vacuum” குண்டுகள் என அழைக்கின்றனர். இந்த குண்டு வெடிக்கும் ஒக்சிஜன் உறிஞ்சப்பட்ட இடங்களை நோக்கி தீப் பரவும் எனக் கூறப்படுகிறது. இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். உக்ரைன் நாட்டின் பல தலைவர்களும் ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை இரண்டாம் உலகப் போரின் நடத்தப்பட்ட தாக்குதலுடன் ஒப்பிட்டு விமர்சிக்கின்றனர்.