இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது அதில் மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  உரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் இன்று பிற்பகல் 1:30 மணி அளவில் நடைபெறுமெனவும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இது நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன்-15)  இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது இந்நிலையில்  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்யாவின் 75 வது ஆண்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டுள்ளார். அதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் சீனாவின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் ராஜ்நாத் சிங் அவர்களை சந்திக்க மாட்டார் என கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் இருநாடுகளுக்கும் இடையில் ராணுவம் மற்றும் ராஜதந்திர அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது எனவே சீனர்களை அவர் புறக்கணிப்பார் என கூறப்படுகிறது.  

இந்நிலையில், இன்று பிற்பகல் 1:30 மணி அளவில்  (R.I.C) ரஷ்யா, இந்தியா, சீனா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. அதில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்து கொள்வார்கள் எனவும், அதில் மூன்றாவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இருநாட்டுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில்  அதை தணிக்கும் முயற்சியாக ரஷ்யா இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மூன்று நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும் என ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கி தெரிவித்துள்ளார். மேலும் இந்த அமைப்பு ஒரு தனித்துவமான தளமாக அமையும் என்றும், இது இருநாட்டுக்கும் இடையிலான உரையாடலை  வலுப்படுத்துவதற்கும், நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை பிராந்தியத்தில் நம்பிக்கையை வளர்க்க உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாகவே எல்லையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், (R.I.C) கூட்டம் நடத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில்  ரஷ்யா இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இதற்கான கடைசி கூட்டம் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது, அதில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்,  2017இல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் உலகின் சிறந்த முன்னணி பொருளாதார நாடுகள் என்ற வகையில், உலகின் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து நமக்கிடையே கருத்து பரிமாற்றம் அவசியம் என்றும்  முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் நம் முத்தரப்பு சந்திப்பு ஒரு பயனுள்ள தளமாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.  (R.I.C) என்பது ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டமாகும், இதில் ஆசிய கண்டத்தின் மிக முக்கிய நாடுகளாக உள்ள இந்த மூன்று நாடுகளும் வளர்ச்சி, பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு  அமைப்பாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.