Russia Ukraine War: போரை நிறுத்த ரஷ்யா அறிவிப்பு.. உக்ரைனின் முக்கிய நகரங்களில் போர் நிறுத்தம்..
Russia Ukraine War: உக்ரைன் தலைநகர் கீவ், கிமி உள்ளிட்ட நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பிரான்ஸ், இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அங்கு சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்புடன் வெளியேறும் வகையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி போர் தொடுத்தது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக இராணுவ தாக்குதலை ரஷ்ய படை தொடர்ந்து வருகிறது. போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இந்தியா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். போர் பதற்றம் காரணமாக, தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்த மக்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.
ரஷ்ய படைகள் மீது உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் தங்கள் நாட்டை காப்பாற்ற எண்ணுபவர்கள் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் அதிரடியாக அறிவித்தார். மேலும் இது ரஷ்ய படையினர் முன்னேறுவதை தாமதப்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூல இதுவரை 60 க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம், 16,000 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கார்கீவ் மற்றும் சுமியை தவிர, உக்ரைனின் மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள சுமி நகரில் தற்போது சண்டை அதிகரித்துள்ளதால், அங்குள்ள மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் கடுங்குளிர், உணவு தட்டுப்பாடு, தண்ணீர் வசதியின்றி தவித்து வரும் நிலை உருவாகியுள்ளது. சுமி நகரில் இருந்து மூன்று மணி நேரம் பயணத் தூரத்தில் உள்ள போல்டாவாவில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமி நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேறி பாதுகாப்புடன் போல்டாவை அடைய ஏற்கெனவே உக்ரைனை இந்தியா அணுகியுள்ளது. இதற்காக தற்காலிகமாக போர்நிறுத்தத்தை மேற்கொள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா மீண்டும் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கீவ், கார்கீவ்,சுமி, மரியுபோல் உள்ளிட்ட தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கோரிக்கையை ஏற்று, போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகப் பேசினார். இந்த உரையாடலின் போது, ரஷ்ய படைகள் சுற்றிவளைத்துள்ள உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலிருந்து பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு தவறிவிட்டதாக புதின் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தியாக தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மேலும் உக்ரைனின் அணு உலைகளை தாக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளக்கம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.