கோலாகலமாக தயாராகும் நாய் கறி திருவிழா! பெருமளவில் திருடப்படும் தெரு நாய்கள்...
சீனாவில் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த திருவிழாவில் பலியிடப்படும் விலங்குகள்.
இந்த ஆண்டு யூலின் நாய்கறி திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. சுமார் ஒரு வாரம் இந்த நாய்கறி திருவிழா படு பயங்கரமாக நடைபெறும். இந்த திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. சீனாவில் கோடைகாலங்களில் நாய் கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது சீனர்கள் நம்புகின்றனர். அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை, பூனைகளை பலியிடுதலும் அரங்கேறி வருகின்றன.
ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே நாய்கள் திருடப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் மிக கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, நாய்கள் மட்டுமில்லாமல் பூனைக்கறியும் இந்த திருவிழாவில் கிடைக்கும். இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எதைபற்றியும் கவலைப்படாமல் நாய்கறி திருவிழாவுக்கு சீனர்கள் தயாராகி வருகின்றனர்.
எனவே இந்த மாமிச விழாவில் பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயாராக உள்ளதாம். இதற்காக நாய்கள் பெருமளவில் திருடப்பட்டு யூலின் நகருக்கு கூண்டுகளில் அடைத்து கொண்டு வரப்பட்டுள்ளன.