இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Reports Of Regime Change in Iran: ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்க இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் மூண்டுள்ளது. இரு தரப்பினரும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூல்ம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
இஸ்ரேல்-ஈரான் போர்
ஈரானில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் வைத்துள்ள அந்நாட்டின் தலைமை மத குருவான அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். ஈரான் ராணுவம் போர் விதிமுறைகளை மீறி இஸ்ரேலின் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயதுல்லா அலி கமேனிக்கு மக்கள் எதிர்ப்பு
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதுங்கு குழியில் சென்று பதுங்கியுள்ளார். இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் முற்றிலும் குழப்பத்திலும் குழப்பத்திலும் உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலையில், அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதனால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரேசா பஹ்லவி
இதனால் ஈரானிய மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஈரானின் ஷாவின் வழித்தோன்றலான ரேசா பஹ்லவி, அவரது தலைமை மற்றும் பரம்பரையின் கீழ், ஈரான் ஒரு துடிப்பான நாடாக - ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாக மாறும் என்று கூறியிருக்கிறார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் "இஸ்லாமிய குடியரசு அதன் முடிவுக்கு வந்துவிட்டது, சரிந்து கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார், "எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது, ஒன்றாக நாம் வரலாற்றின் பக்கத்தைத் திருப்புவோம்" என்று தெரிவித்தார்.
அயதுல்லா அலி கமேனி மீது கடும் விமர்சனம்
இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு 1979 இல் மன்னர்கள் வீழ்ச்சியடைந்த போதிலும், நாடுகடத்தப்பட்ட ஈரானின் பட்டத்து இளவரசராகக் கருதப்படும் ரேசா பஹ்லவி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "எனது சக நாட்டு மக்களே, 'இஸ்லாமிய குடியரசு' அதன் முடிவை எட்டியுள்ளது மற்றும் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. கமேனி, பயந்துபோன எலியைப் போல, நிலத்தடியில் ஒளிந்துகொண்டு, நிலைமையின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்'' என்று கூறியுள்ளார்.
எதிர்காலம் பிரகாசமாக உள்ளது
தொடர்ந்து பேசிய ரேசா பஹ்லவி, ''எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. மேலும் ஒன்றாக, வரலாற்றில் இந்த கூர்மையான திருப்பத்தை நாம் கடந்து செல்வோம். இந்த கடினமான நாட்களில், கமேனியின் போர் வெறி மற்றும் மாயைகளுக்கு பாதிக்கப்பட்டு பலியாகிவிட்ட அனைத்து பாதுகாப்பற்ற குடிமக்களுடனும் என் இதயம் உள்ளது'' என்று தெரிவித்தார்.
போர் நெருப்பால் எரிவதை தடுக்கிறேன்
நாட்டின் வீழ்ச்சிக்கு ஆயத்துல்லா அலி கமேனியின் ஆட்சியைக் குற்றம் சாட்டிய ரேசா பஹ்லவி, "பல ஆண்டுகளாக, நமது தாயகம் போர் நெருப்பால் எரிவதைத் தடுக்க நான் முயற்சித்து வருகிறேன். இஸ்லாமியக் குடியரசின் முடிவு ஈரானிய தேசத்திற்கு எதிரான அதன் 46 ஆண்டுகாலப் போரின் முடிவு. ஆட்சியின் அடக்குமுறை எந்திரம் இறுதியாக வீழ்ச்சியடைகிறது" என்றார்.
ஈரானை மீட்டெடுக்க வேண்டிய நேரம்
''கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய பஹ்லவி, "இந்தக் கனவை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர இப்போது தேவைப்படுவது நாடு தழுவிய எழுச்சிதான். இப்போது எழுச்சி பெற வேண்டிய நேரம் இது; ஈரானை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது. பந்தர் அப்பாஸிலிருந்து பந்தர் அன்சாலி வரை, ஷிராஸிலிருந்து இஷ்பஹான் வரை, தப்ரிஸிலிருந்து சஹேதான் வரை, மஷ்ஹாத்திலிருந்து அஹ்வாஸ் வரை, ஷாஹர்-இ-கோர்ட் முதல் கெர்மான்ஷா வரை - இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் முன்வருவோம்'' என்று ரேசா பஹ்லவி சூளுரைத்துள்ளார்.
ஜனநாயக அரசாங்கத்தை நிறுவ உறுதி
தொடர்ந்து ஈரான் மக்களுக்கு உறுதியளித்த அவர், "இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சிக்கு அடுத்த நாள் பயப்பட வேண்டாம். ஈரான் உள்நாட்டுப் போரிலோ அல்லது உறுதியற்ற தன்மையிலோ இறங்காது. ஈரானின் எதிர்காலம் மற்றும் அதன் செழிப்புக்காக எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. அயதுல்லா கமேனியின் வீழ்ச்சிக்குப் பிறகு முதல் நூறு நாட்களுக்கும், இடைக்கால காலத்திற்கும், ஒரு தேசிய மற்றும் ஜனநாயக அரசாங்கத்தை நிறுவுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார். அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்ததாலும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியதாலும் ஈரானில் ஆட்சி மாற்றம் உறுதியாகி உள்ளது.
