மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார்.. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு!!
இதற்கு துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசும் முன்வந்துள்ளார். இதுமட்டுமின்றி அமெரிக்காவின் புகழ் பெற்ற முன்னாள் அதிபர்களான பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் தொலைக்காட்சி நேரலையில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.
தடுப்பூசி குறித்து அமெரிக்க மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் மூன்று பேர் மக்கள் முன்னிலையில் தொலைக்காட்சி நேரலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். தொலைகாட்சி நேரலையில் இதற்கான அறிவிப்பை அவர்களே வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவு நவம்பர் 9ஆம் தேதி வெளியானது. அதில் தடுப்பூசி 90% கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது இந்த மருந்தில் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததே இதன் சிறப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வைரஸை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. பல நாடுகள் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில், இங்கிலாந்து தனது நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த அவசர ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டாலும்கூட இதுவரை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (எஃப்டிஏ) ஒப்புதல் வழங்கவில்லை.
ஆனால் விரைவில் அதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது, இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர புதிதாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் கொரனா வைரஸ் தடுப்பூசி குறித்து அமெரிக்க மக்கள் மத்தியில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் சுமார் 40 சதவீதம் மக்கள் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். தடுப்பூசி பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் ஜோ பிடன் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்த உடன், மக்கள் முன்னிலையில், தொலைக்காட்சியில் நேரலையில் தானே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கு துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசும் முன்வந்துள்ளார்.
இதுமட்டுமின்றி அமெரிக்காவின் புகழ் பெற்ற முன்னாள் அதிபர்களான பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் தொலைக்காட்சி நேரலையில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். தாங்கள் மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் அது மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும், தடுப்பூசி மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து மூவரும் இணைந்து கலந்து கொண்ட தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இதனை கூறியுள்ளனர். அமெரிக்கா உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் (எஃப்டிஏ) அனுமதி வழங்கிய உடன் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதுவரையிலும் கூட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை தி கார்டியன் நாளிதழுக்கு கமலா ஹாரிஸ் பேட்டியளித்துள்ளார்,அதில், கொரோனா தடுப்பூசி குறித்து உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அச்சம் உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், தடுப்பூசி அனுமதிக்கப்பட்ட உடன் அதை செலுத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
எனக்கு எப்போதும் இதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை, (எஃப்டிஏ) ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.சிஎன்என் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ஜோ பைடன், இத்தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும், அதன் திறனில் முழு திருப்தியுடன் இருக்கிறேன், தடுப்பூசி போட்டுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன், இந்த தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் முன்னால் செலுத்திக் கொள்ள விரும்புகிறேன். இதுகுறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க கூடாது, எங்கள் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று அமெரிக்க மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இதுபற்றி யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த தடுப்பூசியை பெற ஆர்வமாக காத்திருக்கிறேன், ஒருமுறை வாக்குக் கொடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது என்பதை எனது முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என பிடன் கூறியுள்ளார். இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தடுப்பூசி அமெரிக்காவில் அங்கீகரிக்க படலாம் என நம்பப்படுகிறது.