Russia Ukraine crisis: உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்... ஆனால்... உக்ரைனுக்கு ரஷ்யா போடும் ரூல்ஸ்!!
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் நடத்திய பாதுகாப்புத் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. நேற்றைய தாக்குதலை தொடர்ந்து இன்று ரஷ்யா, உக்ரைனில் 2 ஆவது நாள் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே நேற்று இரவு ரஷ்ய அதிபர் புடினிடம் போரை உடனே நிறுத்துமாறு இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்நிலையில் உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம் என்றும் உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் செர்கி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.