சீனாக்காரனிடம் ஏன் இதை வலியுறுத்தவில்லை..!! மத்திய அரசிடம் ராகுல் சரமாரி கேள்வி..!!
அப்போது சீனாவின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்த இந்திய பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்திற்கான சகாப்தம் முடிந்துவிட்டது, இது வளர்ச்சிக்கான காலம் என எச்சரித்தார்.
இந்திய-சீன எல்லையில் கடந்த இரண்டு மாத காலமாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் லடாக் பகுதியிலிருந்து சீனப் படைகள் பின்னோக்கி நகர்வதாக தகவல் வந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தரப்பில் சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கால்வாய் பகுதி இந்தியாவுக்கே சொந்தம் என ஏன் வலியுறுத்தவில்லை, 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை சீனா நியாயப்படுத்த ஏன் அனுமதித்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது பாஜகவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய-சீன எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது, கடந்த ஜூன்-15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் சீனா எல்லையில் படைகளை குவித்து வருவதால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது, இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லடாக் பகுதிக்கு விரைந்த இந்திய பிரதமர் மோடி அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றினார். இது சீனா மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
அப்போது சீனாவின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்த இந்திய பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்திற்கான சகாப்தம் முடிந்துவிட்டது, இது வளர்ச்சிக்கான காலம் என எச்சரித்தார். மோடியின் பேச்சு சீனாவை மிகுந்த கலக்கமடைய வைத்தது, மொத்தத்தில் இந்தியா போருக்கு தயாராக இருக்கிறது என்பதாகவே மோடியின் உரை அமைந்தது. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு சீனா முன் வந்த நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யியுடன் தொலைபேசியில் உரையாடியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை 5ஆம் தேதி இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது எனவும் அதில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மேலும் எல்லைக்கோட்டுப் பகுதியில் அமைதியை மீட்டெடுக்க இரு தரப்பிலிருந்தும் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் எல்லையில் குவித்து வைத்துள்ள படைகளை திரும்பப் பெறுவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், எந்த வகையில் நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்ச்சியில் எந்த தரப்பும் முயற்சிக்க கூடாது என்றும் இருதரப்பிலும் வலியுறுத்தபட்டதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருநாடுகளும் படைகளை திரும்ப பெற ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் சீனா தன் படைகளை கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பின்வாங்கி இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், தேசிய நலன் தான் முக்கியமானது, அதை பாதுகாப்பதே இந்திய அரசின் கடமையென கூறப்பட்டு வரும் நிலையில் இந்திய-சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தையின்போது, ஏன் இந்திய தரப்பில் உள்ள நியாயம் குறித்து சீனாவுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை? நம் எல்லைக்குள் 20 ராணுவ வீரர்கள் நிராயுதபாணிகளாக கொல்லப்பட்ட விஷயத்தை சீனா போச்சுவார்த்தையின் போது எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? அதை ஏன் இந்தியா அனுமதித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கே முழு இறையாண்மை உள்ளது என்பதையும், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும் ஏன் பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பில் குறிப்பிடவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.