லடக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டு  பகுதியில், பல இடங்களில் இந்திய-சீன துருப்புகள் நேருக்கு நேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் எல்லையில் பதற்றம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால், ரஃபேல் பைட்டர்களில் இந்திய விமானப்படை விமானிகள் இரவு நேரத்தில் மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில், விமானிகள் இமாச்சல  பிரதேசத்தில் எந்த நேரத்திலும் போருக்கு தயாராக  இருக்கும் வகையில், ரபேல் போர் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென தனது ராணுவத்தை குவித்த சீனா, அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடியது, அதையடுத்து இந்திய ராணுவம் பதிலுக்கு படைகளை குவித்து, சீனாவுக்கு எதிர்ப்பு காட்டிய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. ஜூலை 15-ஆம் தேதி சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நடத்திய கொடூரத் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தது. அதேவேளையில் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து எல்லையில் இருந்து படைகள் பின்வாங்கபட்டு வருகின்றன. 

கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் இருந்து சீனா படைகளை பின்வாங்கி இருந்தாலும், பல்வேறு இடங்களில் தன் படைகளை அது முழுமையாக பின்வாங்கவில்லை. இதனால் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையில் சுமார் 58,000 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விமானப்படையை தரம் உயர்த்தும் வகையில் பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதன் முதல் தொகுதி விமானங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்தடைந்தது. இதனால் தெற்காசியாவிலேயே பலம்பொருந்திய விமானப்படையாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் நீடிப்பதால், எப்போது வேண்டுமானாலும் போருக்கு தயாராக இருக்கும்படி ராணுவத்திற்கு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்களை அவசர காலத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பயிற்சியில் இந்திய விமானப்படை விமானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக இமாச்சலப் பிரதேசத்தில் உயரமான மலைப் பகுதிகளுக்கு மத்தியில் ரஃபேல் விமானங்களை இயக்கி இந்திய விமானப்படை விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எதிரிநாட்டு ரேடார்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஊடுருவக் கூடிய ஆற்றல் பெற்றது ரபேல் போர் விமானம் என்பதால், தற்போது இது சீன எல்லையில் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த பயிற்சி இரவு நேரத்தில் நடைபெறுவதாகவும், சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய் சின் பகுதியில் உள்ள மலைச் சிகரத்தில் ரேடார்கள் மற்றும் சிக்னல் அதிர்வெண்ணை உணரக் கூடிய  கருவிகளை சீனா பொருத்தி தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களால் ரஃபேல் விமானத்தை உணரவோ அடையாளம் காணவோ முடியாது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அமெரிக்க போர் விமானங்களை அடையாளம் காண செய்யப்பட்ட கருவிகளே சீனாவிடம் இருப்பதாகவும், எனவே அதனால் ரஃபேலை உணர முடியாது எனவும் கூறப்படுகிறது. எப்போது போர் ஏற்பட்டாலும் அதில்  ரஃபேல் பயன்படுத்தப்படும் வகையில் அது தயாராகி வருகிறது.