வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவாக இருந்து வந்த வைர வியாபாரி நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் பிடிக்க, சர்வதேச போலீசார், 'இன்டர்போலின்' உதவியை, சிபிஐ நாடியது. 

இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், நிரவ் மோடி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதை, அந்நாட்டு பத்திரிகை ஊடகங்கள் செய்தியை வெளியிட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து லண்டன் போலீசார் இன்று நிரவ் மோடியை கைது செய்துள்ளனர். அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும் என எதிர்கார்க்கப்படுகிறது.