மீண்டும் போர்க்களமான இலங்கை.. அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகை..
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சீர்குலைவு காரணமாக அந்நாட்டு அதிபர் மாளிகையில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை நாட்டில் வரலாறு காணாத வகையிலான பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அனைத்து பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இலங்கையின் ஜி.டி.பி. மதிப்பு -16.3 சதவீதம் வரை குறைந்துள்ளதால் இலங்கையின் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால் அந்நாட்டில் சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவற்றின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருக்கிறது. இது மட்டுமின்றி இலங்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல மணி நேரங்கள் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. எரிபொருள் மட்டுமின்றி சமையல் எரிவாயு, பால் பவுடர் மற்றும் மருந்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, மக்கள் பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்தி கொள்ள அந்நாட்டு அரசு அறிவுறுத்தி விட்டது. இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் வலுத்து வருகிறது. இலங்கை அரசுக்கு எதிராக அந்நாடு முழுக்க கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இலங்கை எதிர்க்கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பல ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். பொருளாதார நெருக்கடி சூழலுக்கு பொறுப்பேற்று கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அதிபர் மாளிகையை சுற்றி பல ஆயிரக் கணக்கானோர் கூடியதால் போராட்டம் மிகத் தீவிரம் அடைந்தது. பொருளாதார பின்னடவு காரணமாக கடும் கோபத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதனால் அதிபர் மாளிகையை சுற்றிலும் தீ பந்தங்கள், தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளை புகைப்படங்களில் காண முடிகிறது. கடும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
போராட்டத்திற்கு தலைமையேற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, "கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றீர்கள். இன்னமும் போராட வேண்டுமா? தற்போது இலங்கைய ஆளும் கட்சி தீமையை செய்து வருகிறது," என போராட்டத்தில் கலந்து கொண்வர்களிடையே கூறினார்.