அமெரிக்க அதிபர் தேர்தலில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிக்கு எதிராக அந்நாட்டின் பல நகரங்களில் ஆயிரக்கணக்காண மக்கள் வீதிகளில் இறங்கி வந்து போராட்டம் நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

டிரம்பின் இனவெறிப்பேச்சு, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு, அகதிகளுக்கு எதிரான விரோதபோக்கு ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் கோஷமிட்டனர். 

எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என பெருவாரிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. இதனால், ஹிலாரியின் வெற்றியை மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். 

ஏமாற்றம்

ஆனால், தேர்தலில் ஹிலாரி ‘சூப்பர்பவர்’ என்று சொல்லக்கூடிய மக்களின் வாக்குகளை , டிரம்பைக் காட்டிலும் அதிகம் பெற்று இருந்தார். ஆனால், வெற்றிக்கு தேவையான 270 வாக்குகளைப் பெறாததால், டிரம்பிடம் ஹிலாரி தோல்வி அடைந்தார். 

போராட்டம்

இந்த தோல்வியை ஹிலாரியின் ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், டிரம்ப்பின் வெற்றியை எதிர்த்து நேற்று முன் தினம் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

வயது வித்தியாசமின்றி, இனவேற்றுமையை மறந்து, மத நம்பிக்கைகளைக் கடந்து, அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

நகரங்கள்

நியூயார்க், சிக்காக்கோ, பிலடெல்பியா, பாஸ்டன், கலிபோர்னியா, கொலராடோ, சீட்டல், உள்ளிட்ட பலநகரங்களில் சாலையில் இறங்கி டிரம்புக்கு எதிராக கோஷமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘டிரம்ப் எங்கள் அதிபர் இல்லை’, ‘இனி யார் மீதும் வெறுப்பு வேண்டாம் ’ என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தி மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், போராட்டம் நடத்தப்பட்ட நகரங்களில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

டிரம்ப் ஓட்டல்

நியூயார்க் நகரில், 14-வது தெருவில் இருந்து 40-வது தெருவரை மக்கள் ஊர்வலமாக சென்று டிரம்ப் வெற்றிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். குறிப்பாக டிரம்ப்டவர் என்ற ஓட்டல் அமைந்துள்ள இடத்தில் மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஒருநாள் இரவில் மாறமுடியாது

போராட்டத்தில் ஈடுபட்ட கெல்லி லோபஸ் என்ற பெண் கூறுகையில், “ அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் தான் என்ற செய்தியைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். டிரம்ப் தனது பிரசாரம் முழுவதும் இனவெறி, சிகிப்புத்தன்மையின்மை, பெண்களையும், சிறுபான்மையினரையும் நோகடிக்கும் பேச்சு ஆகியவை மட்டுமே இருந்தது. இவரின் மனநிலையை ஒருநாள் இரவில் மாற்றிவிட முடியாது. அப்படியிருக்க இவர் அமெரிக்க மக்களின் உழைக்கப்போவதாக கூறியிருக்கிறார்'' எனத் தெரிவித்தார்.

மக்கள் கருத்து

மேலும், போராட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூறுகையில், “ நாங்கள் அதிபர் டிரம்ப்பை மதிக்கிறோம். அதேசமயம், நாங்கள் செய்யும் போராட்டத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். அது எங்கள் உரிமை. டிரம்பின் வெற்றி அதிர்ச்சியளிக்கிறது. ஆத்திரத்தையும், கோபத்தையும் தூண்டுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து குடியிருப்போர், சிறுபான்மையினர், கருப்பினத்தவர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள் ஆகியோர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்'' எனத்தெரிவித்தனர்.