கூகுள் டீப்மைண்ட் தலைமை விஞ்ஞானி ஷேன் லெக், அடுத்த பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) வேலைகள் மற்றும் பொருளாதாரத்தை அடியோடு மாற்றும் என எச்சரித்துள்ளார். கணினி சார்ந்த ரிமோட் வேலைகள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் தேடுதல் கருவியாகவோ அல்லது மென்பொருளாகவோ மட்டும் இருக்கப்போவதில்லை. அடுத்த பத்து ஆண்டுகளில் மனிதர்களின் வேலை, வருமானம் மற்றும் பொருளாதார நிலையை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு சக்தியாக இது உருவெடுக்கும் என கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஷேன் லெக் (Shane Legg) எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் பேராசிரியர் ஹன்னா ஃபிரை உடனான நேர்காணலில் பேசிய ஷேன் லெக், "மனித அறிவாற்றல் தான் உலகின் உச்சக்கட்ட அறிவு என்று நான் நினைக்கவில்லை," என்று குறிப்பிட்டார். மனித மூளையை விட பன்மடங்கு வேகத்தில் தகவல்களைச் செயலாக்கும் திறன் கொண்ட ஏஐ இயந்திரங்கள், விரைவில் மொழி அறிவு மற்றும் பொது அறிவில் மனிதர்களை விஞ்சிவிடும் என்று அவர் கூறினார்.
யார் யாருக்கு ஆபத்து?
இணையம் வழியாக வீட்டிலிருந்தே (Remote Work) கணினி மூலம் செய்யப்படும் வேலைகள் தான் முதலில் பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
முன்பு 100 மென்பொருள் என்ஜினியர்கள் தேவைப்பட்ட ஒரு வேலைக்கு, இன்னும் சில ஆண்டுகளில் 20 பேர் மட்டுமே போதுமானதாக இருக்கும். மீதமுள்ள வேலைகளை ஏஐ கருவிகளே செய்து முடிக்கும். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி செய்யப்படும் தரவு பகுப்பாய்வு (Data Analysis), நிரல் எழுதுதல் (Coding) மற்றும் கணித ரீதியான பணிகள் அதிக ஆபத்தில் உள்ளன.
ஆனால் பிளம்பிங் போன்ற உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளுக்கு இப்போதைக்கு பாதிப்பு இருக்காது என ஷேன் லெக் கூறுகிறார்.
உழைப்புக்கு ஊதியம் கிடைக்காதா?
தற்போதுள்ள பொருளாதார அமைப்பில் மனிதர்கள் தங்களின் உடல் அல்லது மன உழைப்பை வழங்கி அதற்குப் பதிலாக வருமானம் பெறுகிறார்கள். ஆனால், இயந்திரங்கள் மனிதர்களை விடச் சிறப்பாகவும், வேகமாகவும், மலிவாகவும் வேலை செய்யும் போது, இந்த பழைய முறை வேலை செய்யாது என்று லெக் எச்சரிக்கிறார்.
"2020-ல் கொரோனா பெருந்தொற்று வருவதற்கு முன்பு மக்கள் எப்படி எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தினார்களோ, அதேபோல்தான் ஏஐ மாற்றத்தையும் மக்கள் தற்போது பார்க்கிறார்கள். ஆனால் ஒரு பெரிய மாற்றம் நிச்சயம் வரப்போகிறது," ஷேன் லெக் குறிப்பிட்டுள்ளார்.
வேலை இழப்புகள் குறித்த கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், ஏஐ தொழில்நுட்பம் ஒரு 'பொற்காலத்தை' (Golden Age) உருவாக்கும் என்றும் அவர் நம்புகிறார். உற்பத்தித் திறன் அதிகரிப்பு, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் உலகம் முன்னேறும். ஆனால், அந்த முன்னேற்றத்தால் கிடைக்கும் செல்வத்தை அரசாங்கங்கள் எப்படி மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்போகின்றன என்பதில்தான் உண்மையான சவால் உள்ளதாக அவர் கூறுகிறார்.


