மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் விபத்து: 10 பேர் பலி!
மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
மலேசியாவின் சிலாங்கூரில் சிறிய ரக தனியார் ஜெட் விமானம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஷா ஆலமில் உள்ள எல்மினா டவுன்ஷிப்பிற்கு அருகே நடந்த அந்த விவத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானம் வெடித்ததில் தீப்பிழம்புடன் கரும்புகைகள் விண்னை முட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேர் மற்றும் காரில் பயணம் செய்த ஒருவர், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
N28JV என்ற எண்ணின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பீச்கிராஃப்ட் 390 விமானம் எல்மினா அருகே விபத்துக்குள்ளானதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம், தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் வேலட் மூலம் இயக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.08 மணிக்கு லங்காவியில் இருந்து சுபாங் விமான நிலையத்திற்கு சென்ற விமானம், தரையிறங்குவதற்கு 10 கிமீக்கு முன்பு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து புகை வெளியேறுவதைக் கவனித்ததாகவும், ஆனால், விமானத்தில் இருந்து எவ்வித ஆபத்து அழைப்பும் விடுக்கப்படவில்லை என சுபாங் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் நோரஸ்மான் மஹ்மூத் கூறியுள்ளார்.
விமானம் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை அனுமதியும் கொடுத்தது என சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் கூறியுள்ளார். ஆனால், தரையிறங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன் அந்த சிறிய ரக ஜெட் விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், 10 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஜெட் வேலட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.