பிரசில் நாட்டில், சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பிரசில் நாட்டில், அமேசான் காட்டுப் பகுதியை ஒட்டி, Manaus சிறை அமைந்துள்ளது. அங்கு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதிகளில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட அதிகார மோதல், சிறைக்‍குள் பெரும் கலவரமாக மாறியது.

சிறை அதிகாரிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறித்த கைதிகள், அவற்றைக் கொண்டு, ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இந்த பயங்கர கலவரத்தில், சுமார் 60 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கலவரத்தையடுத்து, சிறையில் இருந்து எவ்வளவு பேர் தப்பிச் சென்றனர் என்பது குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். பிரசிலில் கடந்த 1992-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில், 111 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.