இந்தியா எச்சரிக்கை கொடுத்தும் இலங்கை அலட்சியமாக எடுத்துக் கொண்டது என குண்டுவெடிப்பு பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பல முக்கிய வழிபாட்டு தலங்களில் தற்கொலை படைகள் குண்டு வெடிப்பு நடத்த தயாராகி வருகிறது என கடந்த 4ஆம் தேதி இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த எச்சரிக்கை குறிப்பில் கொழும்பில் எந்தெந்த இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கையை இலங்கையை சார்ந்த அரசியல் தலைவர்களும் ராணுவத் தளபதிகளும் சற்று அலட்சியமாக எடுத்து கொண்டுள்ளனர்.

இருந்த போதிலும் இலங்கை போலீஸ் தலைவர் பூஜித் ஜெயசுந்தரா என்பவர் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே கடிதமொன்றை அனுப்பி இருந்தார். அதில், "கொழும்பில் உள்ள பல முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகங்களில் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பாதுகாப்பை அதிகரிக்க செய்ய வேண்டும்" என கேட்டுள்ளார். 

அதன் பிறகும் உள்ளூர் போலீஸ் அலட்சியமாக எடுத்துக் கொண்டதால் இன்று இந்த விளைவை சந்திக்க நேரிட்டுள்ளது. "சற்று கவனக்குறைவாக இருந்து விட்டோம்" என தற்போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வருத்தம் தெரிவித்து உள்ளார்