எல்லை விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், இது பரிணாம வளர்ச்சிக்கான நேரம் எனவும் இந்திய பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். இந்திய எல்லைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில்  சீனா உரிமை கொண்டாடும் இந்திய பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் சீன ராணுவமும் எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்ற அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று காலை திடீரென இந்திய பிரதமர் மோடி லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டார், தரை மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் இருக்கும் லே பகுதியில் உள்ள நீமுவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்,  பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், தரைப்படை தளபதி எம்.எம் நரவானே  ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி உற்சாகமூட்டும் வகையில் உரையாடினார். அப்போது பேசிய அவர், விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது.  இப்போது இருப்பது வளர்ச்சிக்கான நேரம். வேகமாக மாறி வரும் காலங்களில் பரிணாமவாதம் மட்டுமே மிகப் பொருத்தமானதாக இருக்கும். நெருக்கடி நேரத்திலும் வளர்ச்சிக்கு  வாய்ப்புகள் உள்ளது. வளர்ச்சியே எதிர்காலத்தின் அடிப்படையாகவும் உள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எல்லை விரிவாக்கம் மனித குலத்திற்கு மிகவும் தீங்கு விளைவித்தது. மனிதநேயத்தை அது அழித்தொழித்தது. விரிவாக்கத்தின் வெற்றி எப்போதும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. 

இப்போது உலகம் முழுவதும் விரிவாக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பப்படுகிறது, இன்று உலகம் பரிணாம வாதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான முடிவை பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு இரண்டு தாய்மார்கள் நினைவுக்கு வருகிறார்கள், முதல் தாய் இந்தியா. இரண்டாவது உங்களைப் போன்ற வலிமைமிக்க வீரர்களைப் பெற்றெடுத்த அந்த தைரியமான தாய்மார்கள். உங்கள் மரியாதை, உங்கள் குடும்பத்தின் மரியாதை மற்றும் அன்னையர் இந்தியாவின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு நாடு அதிக முன்னுரிமை அளிக்கிறது. படைகளுக்கு தேவையான ஆயுதம், நம் படை வீரர்கள் என அனைத்திலும் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.  இப்போது நம்நாட்டில் எல்லை உட்கட்டமைப்புகளுக்கான செலவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நாடு இன்று அனைத்து மட்டங்களிலும் தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி கூறினார். அவரது உரை சீனாவை எச்சரிக்கும் வகையிலும், அந்நாட்டுக்கு அறிவுரை கூறும் வகையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.