ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தை  நேற்று  தொடங்கிய பிரதமர் மோடி இந்தியாவின் பரிசாக அந்நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக வழங்குகிறார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் 10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது. வளர்ச்சி, உலகளாவிய ஆட்சி நிர்வாகம், சுகாதாரம் மற்றும் தடுப்பூசி, அமைதி, நிலையான முன்னேற்றம் போன்ற அம்சங்களுடன் இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று சென்றார் . முதலில் இரண்டு நாட்கள் பயணமாக ருவாண்டா செல்லும் மோடி, அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார்.  ருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ருவாண்டா அரசின் 'கிரிங்கா' எனும் திட்டத்தை மோடி துவங்கி வைக்கிறார். 'குடும்பத்துக்கு ஒரு பசு' எனும் இத்திட்டத்திற்காக, இந்தியாவின் சார்பில் 200 பசுக்களை பரிசாக பிரதமர் வழங்குகிறார். ருவாண்டாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி, இன்று உகாண்டா செல்ல உள்ளார்.

பிரதமர் மோடியுடன் உயர்நிலை வர்த்தகக் குழு ஒன்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருக்கிறது. இன்று உகாண்டாவுக்கு செல்லும் மோடி, அங்கு வாழும் இந்திய சமுதாயத்தினருடன் உரையாடுகிறார். தொடர்ந்து உகாண்டா நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றுகிறார்.

பயணத்தின் நிறைவாக 25ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்லும் மோடி, ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெறும் 10ஆவது பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், தென்னாப்பிரிக்க அதிபரையும் சந்தித்து பேசவுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

5 நாள் பயணமாக ஆப்ரிக்க நாட்டிற்கு சென்றுள்ள மோடி, கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றார்.