பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் மோடி வழங்கிய சிறப்பு பரிசு இதுதான்!!
பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூ கினியாவில் அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப் முன்னிலையில் டாக் பிசின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.
பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். ஜப்பானில் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றார். அங்கு அவரை அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார். பொதுவாக அவர் மாலையில் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்பதில்லை. அந்த சம்பிரதாயத்தை பிரதமர் மோடிக்காக நேற்று ஒதுக்கி வைத்தார். விமான நிலையத்திற்கு சென்று வரவேற்று இருந்தார்.
இன்று ஜேம்ஸ் மாரப் முன்னிலையில் பப்புவா நியூ கினியா நாட்டின் பேச்சு மொழியான டாக் பிசின் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இருந்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், சுபா சசீந்திரன் இணைந்து புத்தகத்தை மொழி பெயர்ப்பு செய்து இருந்தனர்.
பப்புவா நியூ கினியாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், பிரதமர் மோடி தமிழ் கிளாசிக்கின் அடையாளம் திருக்குறள் என்று புகழாரம் சூட்டினார். அப்போது, இந்த புத்தகம் பல்வேறு நிலைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது என்றார். திருக்குறளை டாக் பிசின் மொழியில் மொழிபெயர்த்த முயற்சிக்காக இணை ஆசிரியர்களை பாராட்டினார். "திருக்குறளை டாக் பிசினில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் திருமதி சுபா சசீந்திரன் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். சுபா சசீந்திரன் மரியாதைக்குரிய மொழியறிஞராக இருக்கும் போது, ஆளுநர் சசீந்திரன் தமிழில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
டாக் பிசின் மொழியில் திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டது குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய புலம்பெயர்ந்தோர் தாய்நாட்டுடன் இணைந்திருப்பது... இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை பப்புவா நியூ கினியா மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்குறள் தமிழ் கவிஞரான திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்துடன் நெறிமுறை மற்றும் ஒழுக்க வாழ்க்கைக்கான வழிகாட்டியாக கருதப்படுகிறது. திருக்குறள் 1,330 குறள்களைக் கொண்டுள்ளது, அவை 133 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் பத்து குறள்களைக் கொண்டுள்ளன.