எகிப்தில் பிரதமர் மோடி: சிந்தனை தலைவர்களுடன் சந்திப்பு; அல்-ஹக்கிம் மசூதிக்கு விசிட்!

எகிப்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் சிந்தனை தலைவர்களை சந்தித்தார்.
 

PM Modi meets thought leaders in Egypt and visits Al Hakim Mosque in cairo

பிரதமர் மோடி தனது அமெரிக்க பயனத்தை முடித்துக் கொண்டு, இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை எகிப்தி பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். கடந்த 26 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் எகிப்துக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இது என்பதால், பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் எகிப்து பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும் எனவும், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து பயணம் குறித்து பிரதமர் மோடி, இந்த பயணம் எகிப்து உடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் என்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல் சிசியுடனான கலந்துரையாடலை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, எகிப்தி பிரதமர் முஸ்தபா மட்புலியுடனான வட்டமேஜை பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த பேச்சுவார்த்தையின் போது, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கட்டணத் தளங்கள், மருந்து பொருட்கள் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், எகிப்து பிரதமர் தலைமையில் அந்நாட்டு அமைச்சரவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரிவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா மற்றும் இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட வர்த்தகம் மற்றும் பிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், விவாதிப்பதற்கும் இந்தத்துறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை ஏற்படுத்தியதற்காக எகிப்து நாட்டுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, கெய்ரோவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக, Grand Mufti of Egypt என்றழைக்கப்படும் எகிப்து நாட்டின் மூத்த மதத்தலைவரான டாக்டர் ஷவ்கி இப்ராஹிம் அப்தெல்-கரீம் அலாமை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது சிறப்பு நினைவு பரிசு ஒன்றை பிரதமர் மோடிக்கு அவர் அளித்தார்.

 

 

“இன்று பிரதமர் மோடியை சந்தித்ததில் பெருமை அடைகிறேன், இது எங்களின் இரண்டாவது சந்திப்பு. இரண்டு சந்திப்புகளுக்கு இடையே, இந்தியாவில் பெரிய வளர்ச்சி இருப்பதை நான் கண்டேன். இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கான புத்திசாலித்தனமான தலைமையை பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே சகவாழ்வை ஏற்படுத்துவதில் பிரதமர் மோடி விவேகமான கொள்கைகளை பின்பற்றி வருகிறார். மத ரீதியாக, இந்தியாவுடன் எங்களுக்கு வலுவான ஒத்துழைப்பு உள்ளது. இந்தியத் தரப்பும் இங்கு ஒரு தகவல் தொழில்நுட்ப மையத்தை வழங்க உள்ளது. எங்களிடம் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் அதிகம்.” என பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து டாக்டர் ஷவ்கி இப்ராஹிம் அப்தெல்-கரீம் அலாம் தெரிவித்துள்ளார்.

 

 

இதையடுத்து, பிரதமர் மோடி அந்நாட்டின் சிந்தனை தலைவர்களை சந்தித்தார். அந்த வகையில், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹாசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது மேதத் ஹசன் அலமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில் இந்திய நிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்ததாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.

“பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிப்பதாக இருந்தது. ஒரு தனியார் துறை நிறுவனமாக, இந்தியாவின் தனியார் துறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில், பொறியியல், உற்பத்தி என உள்கட்டமைப்பு உலகில் இந்தியாவின் தனியார் துறை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. பிரதமர் மோடியை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அங்கு அவர் எனக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார்.” என முகமது மேதத் ஹசன் அலாம் தெரிவித்துள்ளார்.

 

 

கெய்ரோவில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பெட்ரோலியம் மூலோபாய நிபுணருமான தரீக் ஹெஜ்ஜியையும் பிரதமர் மோடி சந்தித்து, உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். உலகளாவிய புவிசார் அரசியல், எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

ரஷ்யாவில் தணிந்தது பதற்றம்: வாக்னர் குழுவுடன் சமாதானம் - முழு விவரம்!

தொடர்ந்து, எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த மசூதியான தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே தாவூதி போஹ்ரா  சமூகத்துடன் இணக்கமான உறவை கொண்டிருந்தார்.

 

 

முன்னதாக, கெய்ரோவில் உள்ள இரண்டு இளம் யோகா பயிற்றுனர்களான ரீம் ஜபக் மற்றும் நாடா அடெல் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். யோகாவில் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டிய பிரதமர், அவர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், எகிப்தில் யோகா செய்வதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசியுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios