மோடி - ஜின்பிங் சந்திப்பு: கிழக்கு லடாக்கில் சமரசமா?
ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.
ரஷ்யாவில் இன்று இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்களது வெளிப்படையான நேருக்கு நேர் சந்திப்பு இன்று நடக்கிறது.
ரஷ்யாவின் கன்சாவில் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று காலை ரஷ்யா சென்றடைந்தார். கன்சாவில் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் ரஷ்யா வாழ் இந்திய வம்சா வழியினரும் கலந்து கொண்டனர். நேற்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருந்தினர்களுக்கு விருந்து அளித்து இருந்தார்.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வந்துள்ளார். இவரை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு லடாக் பகுதியில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சீனா தரப்பில் 22 வீரர்கள் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது. இந்த சம்பவம் இரண்டு நாடுகளுக்கு இடையே பெரிய அளவில் விரிசலையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இங்கு இருநாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற ஒப்பந்தத்தை சமீபத்தில் எட்டியுள்ளனர்.
இந்த சம்பவங்களுக்குப் பின்னர் இன்று நேருக்கு நேர் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்கின்றனர். எல்லையில் இருதரப்பினரும் அமைதி காப்பது என்ற உடன்படிக்கைக்கு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்சனைகளை தூதரக ரீதியாக, பேச்சுவார்த்தை மூலம் மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு: இந்தியா-ரஷ்யா உறவு குறித்து பிரதமர் மோடி கருத்து:
''ரஷ்யாவுக்கு கடந்த 3 மாதங்களில் மேற்கொண்ட இரண்டு பயணங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பையும் ஆழமான நட்பையும் பிரதிபலிக்கின்றன. இந்த நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாக'' பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்து இருந்தார்.
புடினுடனான தனது முதல் சந்திப்பின் போது, ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாடு அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
"கடந்த மூன்று மாதங்களில் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட எனது இரண்டு பயணங்கள் எங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பையும் ஆழமான நட்பையும் பிரதிபலிக்கின்றன. ஜூலை மாதம் மாஸ்கோவில் நடந்த வருடாந்திர உச்சி மாநாடு அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை பலப்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அதற்கான சிறப்பு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கு முயற்சித்து வருகின்றன'' என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு மோடி தெரிவித்து இருந்தார். அதேசமயம், அடுத்தாண்டு இந்தியாவில் நடக்கும் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு புடினுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இருநாட்டு தலைவர்களும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எனர்ஜி, மக்கள் நட்பு என அனைத்து துறைகளிலும் அக்கறை செலுத்தி வருவதாக இந்தியா தரப்பில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைதியான முறையில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா இதற்கு துணை இருக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து தினமும் கண்காணித்து வருகிறோம். எதிர்காலத்தில் எங்களால் முயன்ற உதவியை செய்வோம் என்றும் மோடி உறுதி அளித்துள்ளார். கிவ் சென்று இருந்தபோது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த குறித்தும் புடினுடன் மோடி கருத்து பறிமாறிக் கொண்டார்.