தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்; பள்ளத்தில் பாய்ந்ததால் அதிர்ச்சி; பயணித்த அனைவரும் உயிர்தப்பினர்...
துருக்கியில் உள்ள டிராப்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தில் சறுக்கி சென்று கடலில் பாய்ந்தது விமானம். பயணித்த அனைவரும் நல்ல வேளையாக உயிர் பிழைத்தனர்.
துருக்கி நாட்டு தலைநகரான அங்காராவில் இருந்து டிராப்சான் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை அன்று பெகாசஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான சிப்பந்திகளும் பயணித்த இந்த விமானம் டிராப்சன் நகரை அடைந்ததும் அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி இடது பக்கமாக பள்ளத்தை நோக்கி சறுக்கி சென்றது.
நல்ல வேளையாக விமானத்தில் பயணித்த பயணிகள், விமான சிப்பந்திகள் உட்பட அனைவரும் உயிர் தப்பினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. அங்கு விரைந்து சென்ற விமான நிறுவன அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கருங்கடல் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடற்படையும் இணைந்து பயன்படுத்தும் இந்த விமான நிலையத்தில், ஒற்றை ஓடுதளமே உள்ளது.
விமானம், பள்ளத்தில் கீழ் நோக்கி கருங்கடலில் பாய்வது போன்ற புகைப்படங்கள் அந்நாட்டு இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தச் சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை விமானம் நிலையம் மூடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.