மலேசிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், மூட்டைப் பூச்சிகள் மனித ரத்தத்தில் உள்ள DNA-வை 45 நாட்கள் வரை சேமித்து வைப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களில் இருந்து மூட்டைப் பூச்சிகளை சேகரித்து, குற்றவாளிகளை அடையாளம் காணலாம்.

நம் வீடுகளில் உள்ள மெத்தைகளிலும், விரிப்புகளுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒட்டுண்ணியான மூட்டைப் பூச்சிகள் (Bed Bugs), இனி குற்றவாளிகளைப் பிடிக்க உதவு செய்ய முடியும் என்று மலேசிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, வெப்பமண்டல மூட்டைப் பூச்சிகளை (Tropical Bed Bugs) வைத்து மேற்கொண்ட ஆய்வில் இந்த ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.

மனித ரத்தத்தை சேமிக்கும் பூச்சிகள்

இந்தச் சிறிய பூச்சிகள், ஒரு மனிதரின் ரத்தத்தை உறிஞ்சிய பிறகு, அந்த ரத்தத்தில் உள்ள மனித DNA-வை 45 நாட்கள் வரை அப்படியே சேமித்து வைத்திருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால், மூட்டைப் பூச்சிகள், குற்றச் சம்பவங்கள் நடக்கும் இடங்களில் இருந்து சந்தேக நபர்களைக் கண்டறிவதற்கான சிறந்த ஆதார வளங்களாக மாறும் சாத்தியம் உள்ளது.

DNA மூலம் முழு விவரம்

குற்றவாளிகள் தப்பிச் சென்ற நீண்ட நாட்களுக்குப் பிறகும், குற்றம் நடந்த இடத்தில் மூட்டைப் பூச்சிகள் இருந்தால், அவற்றில் இருந்து ஒரு துளி ரத்தத்தைப் பிரித்தெடுத்து, குற்றவாளியின் முழு விவரத்தையும் போலீஸாரால் சேகரிக்க முடியும்.

இந்த மூட்டைப் பூச்சிகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், குற்றவாளியின் பாலினம், கண் நிறம், முடி மற்றும் தோல் நிறம் போன்ற அடிப்படை தோற்ற விவரங்களைப் (Phenotypic Profiling) பெற முடியும் என்று பூச்சியியல் நிபுணர் அப்துல் ஹாஃபிஸ் அப் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஹாஃபிஸ், "மூட்டைப் பூச்சிகளை மலாய் மொழியில் 'போர்வைக்குள் இருக்கும் எதிரி' என்று அழைப்போம். ஆனால், அவை குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் 'ஒற்றர்களாகவும்' இருக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற பூச்சிகளை விடச் சிறந்தவை

கொசுக்கள் அல்லது ஈக்களைப் போலல்லாமல், மூட்டைப் பூச்சிகளால் பறக்க முடியாது. அவை ரத்தத்தை உறிஞ்சிய பின், ரத்தம் நிறைந்து, அதிகமாக நகர முடியாமல் போகின்றன. அவை ரத்தம் உறிஞ்சிய இடத்தில் இருந்து அதிகபட்சமாக 20 அடி (ஆறு மீட்டர்) சுற்றளவுக்குள் மட்டுமே நகரும்.

"இதுவே இவற்றுக்கு உள்ள தனித்துவமான அம்சம். பறந்து சென்றுவிடும் கொசுக்களுடன் ஒப்பிடுகையில், இவை தடயவியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவதற்கு மிகவும் சரியானவை (Perfect) என்று சொல்லலாம்" என்று ஹாஃபிஸ் விளக்கியுள்ளார்.

ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் STR (Short Tandem Repeat) மற்றும் SNP (Single Nucleotide Polymorphism) குறியீடுகளைப் பயன்படுத்தி, சந்தேக நபர்களின் பாலினம் மற்றும் நிறங்களை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியும்.

முதல் தடயவியல் ஆய்வு

இந்த ஆய்வு, 'Cimex hemipterus' என்ற வெப்பமண்டல மூட்டைப் பூச்சிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முதல் தடயவியல் ஆய்வு ஆகும். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Nature's Scientific Reports-ல் வெளியிடப்பட்டது.

குற்றவாளிகளைக் கண்டறிவதில் மூட்டைப் பூச்சிகள் 'மந்திர சக்தி' அல்ல என்று கூறிய ஹாஃபிஸ், "ஆதாரம் கிடைத்தாலும், மூட்டைப் பூச்சிகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டறிய புலனாய்வாளர்களுக்கு 45 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. மேலும், குற்றம் நடந்த இடத்தில் இந்த மூட்டைப் பூச்சிகள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்" என்றும் தெரிவித்துள்ளார்.