இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் தெற்கு இங்கிலாந்து பகுதியில் வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பழைய வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என்றும் அந்நாட்டின் பிரதமர் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கண்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த  வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்து சமீபத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளித்து, அதை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இங்கிலாந்தில் வைரஸ் பிறழ்வு பெற்று அதாவது வளர்சிதை மாற்றம் அடைந்து புதிய வடிவத்தை எடுத்துள்ளது.

அந்த புதிய வகை கொரோனா மனித உயிரணுக்களில் நுழைந்து செயல்படும் தன்மை பெற்றுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய பிறழ்வு திரிபு வைரஸ் ஸ்பைக் புரதத்தை பாதிக்கிறது, ஸ்பைக் புரதங்களில் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு இந்த வைரசுக்கு எதிராக செயல்படும் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது என ரீடிங் பல்கலைக்கழகத்தின் செல்லுலார் நுண்ணுயிரியல் இணை பேராசிரியர் சைமன் கிளார்க் கூறியுள்ளார். தடுப்பூசி முழுமையாக கிடைக்கும் வரை புதிய கட்டுப்பாடுகள் இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பங்கில் அமலில் இருக்கக்கூடும் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் ஹான்காக் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது எனவும், இது மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் முழுவதுமாக தடுப்பூசி கிடைக்கும் வரை இந்த வைரசை கட்டுக்குள் கொண்டுவருவது கடினம், எனவே அடுத்த சில மாதங்கள் வரை இதே அவரச நிலைமையை நாம் சந்திக்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதே வகையான வைரஸ் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ஹான்காக் கூறியுள்ளார். 

இங்கிலாந்து மக்களில் சுமார் 31 சதவீதம் பேர் மீண்டும் முழுஅடைப்பை பின்பற்ற வேண்டியிருக்கும் எனவும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து லண்டன் பெருநகர காவல் துறையினர் ஆலோசித்து வருகின்றனர் எனவும் ஹான்காக் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது உருவாகியுள்ள இந்த புதிய வகை வைரஸ் 70 சதவீதம் அதிக தொற்றாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இது ஒரு ஆரம்ப நிலைதான், இந்த வைரஸ் இங்கிலாந்தின் ஒவ்வொரு பகுதியிலும் தென்படத் தொடங்கியுள்ளது, ஆனால் அது சிறிய எண்ணிக்கையில் உள்ளது. எனவே மீண்டும் ஊரடங்கு நடைமுறைப் படுத்துவது அவசியம் எனக் கூறியுள்ளார். இந்த வைரஸ் கடந்த நவம்பர் மாதம் பிறழ்வு பெற்றதாகவும், இது தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது எனவும் கடந்த செப்டம்பரில் இது ஒரு நோயாளிக்கு தென்பட்டது எனவும் இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக தென்கிழக்கு இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் பல மாதங்களுக்கு நீட்டிக்க படலாம் எனவும், எனவே கிறிஸ்மஸ் பண்டிகை யை ரத்து செய்துவிட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக  ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தடைவிதி த்துள்ளது குறிப்பிடதக்கது.