குழந்தைகளை கைவிட்ட பெற்றோர்: சிங்கப்பூர் அரசு அதிரடி சட்டம்!
குழந்தைகளை கைவிட்ட பெற்றோர் திருத்தப்பட்ட சட்டத்தின் பலன்களை பெற முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது
குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்த, கைவிட்ட அல்லது புறக்கணித்த பெற்றோர், திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பலன்களையோ, பண உதவியையோ பெற முடியாது என சிங்கப்பூர் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சிங்கப்பூர் அரசு பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் குறித்து தனது தொடக்க உரையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சீ கியான் பெங், “பெற்றோர் பராமரிப்புச் சட்டத்திருத்தமானது, பெற்றோர் மீதான பக்தியை குழந்தைகள் நிரூபிப்பதன் நோக்கம் கொண்டதல்ல. ஆனால், உதவி தேவைப்படும் வயதான பெற்றோருக்கு அடிப்படையாக குறைந்தபட்ச அளவில் குழந்தைகள் கொடுப்பதை உறுதி செய்யும் நோக்கம் கொண்டது.” என்றார்.
“இந்த சட்டத்திருத்தம் வயது முதிர்ந்த பெற்றோரை அவர்களது பிள்ளைகள் கவனித்து கொள்ளும் கடமையை உணர்த்துகிறது. இந்த கடமையை நாம் ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். இதனை தனிப்பட்ட முறையில் அரசு கவனிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.
ஆனால், குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்த, கைவிட்ட அல்லது புறக்கணித்த பெற்றோர், திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பலன்களையோ, பண உதவியையோ பெற முடியாது. ஏனெனில் பல ஆண்டுகளாக தங்களை தவிர்த்த பெற்றோரை அக்குழந்தைகள் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். மறக்க முயற்சித்த அனுபவங்களை அவர்கள் முன் மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளை கைவிட்ட பெற்றோர் சட்டத்தின் பலன்களை பெற முடியாது என்றும் சீ கியான் பெங் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், குழந்தைகளால் கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பெற்றோர், தங்களுக்கான உரிமை கோரல்களுக்கு முன்னர், பெற்றோரைப் பராமரிப்பதற்கான தீர்ப்பாயத்திடம் அனுமதி பெற வேண்டும்.
விலாசம் மாத்தினா சொல்லமாட்டீங்களா? கடுப்பாகி Fine போட்ட சிங்கப்பூர் அரசு - எத்தனை லட்சம் தெரியுமா?
1995 இல் நடைமுறைக்கு வந்த பெற்றோர் பராமரிப்பு சட்டத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சீ கியான் பெங் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழு உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் கடைசியாக, சீ கியான் பெங் நாடாளுமன்றத்தில் 2010இல் தாக்கல் செய்த தனிநபர் மசோதா மூலம் திருத்தப்பட்டது. சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான சமரச அனுகுமுறையை நோக்கமாக கொண்டு அப்போது முக்கிய மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால், இந்த முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், புறக்கணிக்கப்பட்ட வயதான பெற்றோருக்கு ஆதரவை அதிகரிக்கவும், தங்களது கடமைகளைச் செய்யாத பெற்றோர்களுக்கான பலன்களை தடுக்கவும் என நான்கு முக்கிய திருத்தங்களை மசோதாவில் பணிக்குழுவானது முன்மொழிந்துள்ளது.
பெற்றோர்கள் பராமரிப்பு உரிமைகோரல்களை தாக்கல் செய்வது குறித்து ஆணையரும், தீர்ப்பாயமும் தீவிர ஆராய்ந்துள்ளது. அதில், கமிஷனர் அலுவலகத்தில் நான்கில் ஒரு வழக்கும், தீர்ப்பாயத்தில் மூன்றில் ஒரு வழக்கும், சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கியது என சீ கியான் பெங் தெரிவித்துள்ளார்.
குழந்தையைப் பெற்றோர்கள் பாதுகாப்பதிலும், அதேநேரத்தில் பெற்றோருக்கு நியாயமான நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய சமநிலையில் செயல்பட வேண்டும். இரு தரப்புக்கும் நியாயமாக சட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.