கொரொனா தொற்றுநோய்க்குப் பிறகு பெற்றோர் தங்கள் மூன்று குழந்தைகளை 4 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
Parents locked 3 children at home for 4 years: சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதையும் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்தது. இந்த கொடிய தொற்று பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும் காவு வாங்கியது. கொரோனாவால் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டது. கொரோனா காரணமாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பல மாதங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்தன. மக்கள் பல மாதங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
4 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்த பெற்றோர்
கொரொனா முடிந்தபிறகு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், ஸ்பெயினில் ஒரு பெற்றோர் கொரொனாவுக்கு பயந்து தங்களது 3 குழந்தைகளையும் வீட்டில் அடைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், 2021 முதல் சூரிய ஒளியைக் கூட காணாமல் மூன்று குழந்தைகளை தாய், தந்தை இருவரும் வீட்டுக்குள்ளேயே வளர்த்து வந்தது தெரியவந்தது. 10 வயது மூத்த குழந்தையும், 8 வயது இரட்டைக் குழந்தைகளும் பெற்றோரால் கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டுக்குளேயே 'லாக்டவுனில்' இருந்தனர்.
சூரிய ஒளி, மழை
ஸ்பெயினில் கொரொனா பரவத் தொடங்கியபோது 53 வயதான ஜெர்மன் தந்தையும், 48 வயதான ஜெர்மன்-அமெரிக்க தாயும் தங்கள் குழந்தைகளை வீட்டின் ரகசிய அறைக்கு மாற்றினர். கடந்த நான்கு ஆண்டுகளாக குழந்தைகள் இந்த ரகசிய அறையில்தான் வாழ்ந்து வந்தனர். கொரொனா ஓய்ந்து ஸ்பெயின் உள்பட உலக நாடுகளே இயல்பு நிலைக்கு திரும்பினாலும், இந்த பெற்றோர் கொரோனா பயத்தில் தங்கள் குழந்தைகளை வெளியில் விடவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக சூரிய ஒளியையோ அல்லது மழையோ அந்த குழந்தைகள் பார்க்கவில்லை,
தாய், தந்தை கைது
இது குறித்து தகவல் அறிந்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று குழந்தைகளை வெளியே கொண்டு வந்தபோது, குழந்தைகள் வெளியுலகத்தை அதிசயத்துடன் பார்த்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த குழந்தைகளின் தந்தை மற்றும் தாயைக் கைது செய்த போலீசார், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
5 பேருக்கும் கொரோனா தொற்று
ஐந்து பேருக்கும் கோவிட் நோய்க்குறி இருக்கலாம் என்றும், அவர்களுக்கு சிறப்பு கவனிப்பும் சிகிச்சையும் தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் குழந்தைகளின் தோற்றம் கூட மாறிவிட்டதாக விசாரணைக்கு தலைமை தாங்கிய போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


