தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘சார்க்’ அமைப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தான் தனக்கு ஆதரவாளர்களான சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளையும் சேர்த்து ‘கிரேட்டர் சார்க்’ (மிகப்பெரிய சார்க்) அமைப்பாக மாற்றும் முயற்சியில் ரகசியமாக இறங்கியுள்ளது.
இந்த செய்தியை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘டான்’ நாளேடு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டான் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
தாக்குதல்
காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
புறக்கணிப்பு
இந்த இரு சம்பவங்களுக்கு பின், இஸ்லாமாபாத்தில் நவம்பர் மாதம் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை நாடுகளும் புறக்கணித்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் சார்க் மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
ரகசியமாக
8 உறுப்புநாடுகள் கொண்ட சார்க் அமைப்பில் இந்தியாவுக்கே பெரும்பாலான நாடுகள் ஆதரவாக இருக்கின்றன என்பதையே இந்த முடிவு காட்டுகிறது. இதனால், சார்க் அமைப்பில் இருந்து இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க சீனா, ஈரான், மத்திய ஆசிய நாடுகளையும் சேர்க்க பாகிஸ்தான் முடிவு செய்து நடவடிக்கையில் ரகசியமாக இறங்கி இருக்கிறது.
இந்த அமைப்பில் சீனாவைச் சேர்க்கும் பட்சத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
இதற்காக பாகிஸ்தானில் இருந்து ஒரு நாடாளுமன்ற குழுவினர் அமெரிக்காவுக்கு கடந்த வாரம் சென்றனர். அவர்கள் வாஷிங்டனில் இது குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, தற்போது நியூயார்க்கில் முகாமிட்டுள்ளனர்.
கிரேட்டர் சார்க்
இது குறித்து பாகிஸ்தான் எம்.பி. முஷாஹித் ஹூசைன் சயத் கூறுகையில், “ கிரேட்டர் சார்க் அமைப்பும் உருவாக்கும் திட்டம் ஏற்கனவே உதயமாகிவிட்டது. இந்த அமைப்பில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளும் சேர்க்கப்பட உள்ளன. தெற்கு ஆசியாவையும், மத்திய ஆசியாவையும் இணைப்பதற்கு சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் முக்கிய பங்காற்றும்.
குவாதர் துறைமுகம் சீனாவுக்கு மட்டும் அருகில் இல்லை, மத்திய ஆசிய நாடுகளுக்கும் அருகில் அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இந்தியா இணையும் என நினைக்கிறோம்'' எனத் தெரிவித்திருந்தார்.
மறுப்பு
ஆனால், தற்போது 8 உறுப்பு நாடுகள் கொண்ட சார்க் அமைப்பையே இந்தியா விரும்பும், கிரேட்டர் சார்க் அமைப்பை ஒருபோதும் இந்தியாவும் ஏற்றுக்கொள்ளாது, மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என டான் நாளேடு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆதிக்கம்
சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் நாடுகள் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகள். இந்தியாவின் பெரும்பாலான எல்லைகள் பூடானைச் சுற்றி இருப்பதால் இந்தியாவுக்கு அந்த நாடும் நெருக்கமானது. அதேசமயம், மாலத்தீவு, நேபாளம், இலங்கை நாடுகள் பாகிஸ்தானுக்கு நெருக்கமான நாடுகள் என்ற போதிலும், இந்தியாவை எந்த விதத்திலும் பகைக்க விரும்பாது.
தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கில், சார்க் உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா தெரிவித்து, தனது ஆதிக்கத்தை பயன்படுத்திக் கொண்டது.
தீவிரம்
ஆதலால், சார்க் அமைப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நாடுகளைச் சேர்க்க பாகிஸ்தான் தீவிரமாக இருக்கிறது என் இந்த தகவலை அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர். இப்போதுள்ள இந்தியா ஆதிக்கம் மிகுந்த சார்க் அமைப்பை மூடுவிழா கொண்டாடி, கிரேட்டர் சார்க்க அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உறுதியில்லை
கிரேட்டர் சார்க் நாடுகள் உருவாக்கம் பாகிஸ்தானின் திட்டம், முயற்சி நடைமுறைக்கு வந்தால்கூட, இந்தியாவுடனான சிக்கலில் பாகிஸ்தானுக்கு உறுப்பு நாடுகள் ஆதரவாக இருப்பார்களாக என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.
பெரும்பாலான மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவுடனே நெருங்கிய நட்பாக இருக்கின்றன. குறிப்பாக ஈரான் கூட பாகிஸ்தானுடன் பிரச்சினையில் தான் இருக்கிறது.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
