அமெரிக்காவில் ஹீரோவான பாகிஸ்தான் டாக்டர்..! ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை..!
அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் வசித்து வரும் மருத்துவர் சவுத் அன்வர் மாநில செனட்டராக இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியா மாகாணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகம் தேவைப்படுக்கூடிய ஒன்றாக வென்டிலேட்டர்கள் இருக்கிறது. அவற்றின் பற்றாக்குறை காரணமாகவே உயிரழப்புகள் அதிகரித்து வருவதாக உணர்ந்த சவுத் அன்வர் ஒரே நேரத்தில் பலருக்கு உதவக்கூடிய வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாக்கியுள்ளார் . இதற்காக ஒரு எளிய ஸ்பிட்டர் சாதனத்தை உருவாக்கி அதன்மூலம் வென்டிலேட்டரில் பல கிளைகள் தோற்றுவிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 7 நோயாளிகளுக்கு உதவும் வகையிலான சாதனத்தை உருவாக்கி அசத்தி இருக்கிறார். இதுகுறித்த தகவலையும் வடிவமைப்பையும் தனது சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டு அதற்கான விளக்கத்தை சவுத் அன்பர் அளித்திருக்கிறார்.
அது பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜிம்பாப்வே, தென்கொரியா உட்பட உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் ஆயிரம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அன்வரின் இந்த கண்டுபிடிப்புக்காக பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் அமெரிக்க மக்களிடையே ஹீரோவாக உருவாகியிருக்கிறார் சவுத் அன்வர். அவரது கண்டுபிடிப்பை வாழ்த்தும் வகையில் குடியிருப்புவாசிகள் கார்களில் வரிசையாக அணிவகுத்து வந்து அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். தனது முயற்சி குறித்து அன்வர் கூறும்போது, எல்லோரும் ஒருவகையில் கொரோனா நோயை தடுக்க போராடி வரும் நிலையில் தனது அனுபவத்தையும் முயற்சியையும் கொண்டு தன்னால் ஆனதை செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நோயை நிர்வகிப்பதற்கான உத்திகள் குறித்து பல்வேறு மட்டங்களில் உள்ள மக்களுக்கு அதுகுறித்து அறிய உதவுவதாக குறிப்பிடும் அன்வர் கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது நடக்கும் போரில் முன் நிற்பவர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதரப் பணியாளர்கள் ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பெரும் பங்கு வகிக்கும் அவர்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தேவை என்றும் உலகம் முழுவதும் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு முதலீடு தேவை என சவுத் அன்வர் வலியுறுத்துகிறார்.