காஷ்மீர்  பிரச்சனையில் சீனாவுக்கு மிகத் தெளிவான பார்வை உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். 2 நாள் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே  பல ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, இந்தியா அதை முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் கொந்தளிப்பு அடைந்த பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனாவின் உதவியுடன் ஐநா மன்றத்தில் முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் 58 க்கும் அதிகமான இஸ்லாமிய  நாடுகளைக் உறுப்பினராக கொண்ட  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும், இந்த அமைப்பின் வெளியுறவு  அமைச்சர்களின் மாநாட்டை சவுதி அரேபியா கூட்ட வேண்டுமெனவும் பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. 

ஆனால் அதை சவுதி அரேபியா கண்டுகொள்ளாததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் சவுதி அரேபியாவிடமிருந்து பெற்ற கடனை அடைக்க சீனாவிடம் இருந்து கடன் வாங்கியுள்ள பாகிஸ்தான், சவுதியின் கடனின் முதல் தவணையை செலுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது கருத்து மோதலில் உள்ள சவுதி அரேபியாவை சமாதானம் செய்ய சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா, ரியாத்துக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரை சவுதியின் இளவரசன் சந்திக்காமல் புறக்கணித்தார். இதனால் மூக்கு அறுபட்ட நிலையில் ராணுவ தளபதி பஜ்வா நாடு திரும்பியுள்ளார். அதனையடுத்து அவசரமாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, அங்கு இரண்டு நாள் தங்கினார், சீனாவின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில் பாகிஸ்தான் திரும்பியுள்ளார் அவர் நேற்று இஸ்லாமாபாத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2019 ஆகஸ்ட் -5ஆம் தேதி காஷ்மீரில் இந்திய எடுத்த நடவடிக்கையை சீனா நிராகரித்துள்ளது. அது ஒருதலைப்பட்ச நடவடிக்கை என்ற கருத்தில் சீனா மிக தெளிவாக உள்ளது. மேலும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் ஆதரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாக தன் பயணத்தின் போது சீனா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக காஷ்மீர் மக்களின் சுதந்திரம் இந்தியாவால் பறிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக காஷ்மீரில் உள்ள ஆறு கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை அம்மக்களின் போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தை  அளித்துள்ளது. அதேநேரத்தில், சவுதிஅரேபியா உடனான பாகிஸ்தானின் உறவு நிலையானது, அந்த உறவு தொடர்ந்து நீடிக்கும், காஷ்மீர் பிரச்சினையில் சவுதி அரேபியாவின் அணுகுமுறை குறித்து ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

 

ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் பார்வை மிக தெளிவாக உள்ளது, தற்போது அதை எப்படி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.  அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு நல்ல முறையில் இருக்கிறது என்றார்.  மேலும், சவுதி அரேபியா கடனை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இது ஒரு வடிகட்டிய பொய், இது போன்ற கற்பனை கேள்விகளுக்கு தன்னிடத்தில்பதில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.