இந்தியாவின் எச்சரிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒருபோதும் அஞ்சாது எனவும், பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும் என இந்தியா பேசுவது பாகிஸ்தானை வம்பிழுக்கும் வேலை எனவும் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவை கண்டித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தடுக்காவிட்டால் பாகிஸ்தான் துண்டுதுண்டாக சிதறும் என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.  ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கலந்து கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தால் அந்நாடு  விரைவில் துண்டு துண்டாக சிதறும் , அதை யாரும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், காஷ்மீர் விவகாரத்தை இத்தோடு மறந்துவிட வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அவரின் பேச்சு குறித்து கருத்து பாகிஸ்தான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் போது இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தூண்டும் வகையில் இவ்வாறு பேசுவது திமிர்தனம்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .  

பாகிஸ்தானை வம்பிழுக்கும் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் ஒருபோதும் அஞ்சாது என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் அண்டை நாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசுவதை சர்வதேச நாடுகள் இப்போதாவது உற்று கவனிக்க வேண்டும் எனவும் இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் அவர்கள் எச்சரித்துள்ளனர்.