இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்ட பழி..!! பலுசிஸ்தான் தீவிரவாதிகளுடன் கூட்டு என குற்றச்சாட்டு..!!
(பி.எல்.ஏ) எனப்படும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் உதவியுடன் இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பாகிஸ்தானில் பங்குச்சந்தை தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் உள்ள பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்திற்குள் கடந்த ஜூன் 29 அன்று நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர், அப்போது அதன் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். அத்தாக்குதலில் நிகழ்விடத்திலேயே 5 காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் படுகாயம் அடைந்த 14 பாதுகாப்பு படை வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்தனர், இதனை அடுத்து கராச்சி தீவிரவாத தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது, பாகிஸ்தான் வர்த்தக கட்டட தலைமை அலுவலக தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி இது. பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் இந்தியாவுடன் உறவு கொண்டுள்ளது.
சீனா-பாகிஸ்தான் இடையே சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது முதல், பலுசிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. (பி.எல்.ஏ) எனப்படும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் உதவியுடன் இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். பலுசிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு இந்தியா உதவுகிறது எனவும் பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் மீது சரமாரி குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்து இது தெளிவாக தெரிகிறது எனவும், பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.