பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் மற்றும் வானாவில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவே காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவி பெறும் பினாமி குழுக்களே தாக்குதல் நடத்தியதாக அவர் கூறுகிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ளார்.
பழிபோடும் பாகிஸ்தான்
அத்துடன், ஆப்கானிஸ்தான் எல்லையோர நகரான வானாவில் உள்ள கேடட் கல்லூரி மீது திங்கட்கிழமை நடந்த தாக்குதலிலும் புது டெல்லிக்கு பங்கு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அரசின் செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் (APP) வெளியிட்ட தகவலின்படி, இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் "இந்தியாவால் நிதியுதவி செய்யப்படும் பயங்கரவாதப் பினாமி குழுக்களே" காரணம் என்று ஷெரீப் குற்றம் சாட்டினார்.
"இந்தத் தாக்குதல்கள், பாகிஸ்தானை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் அரசு ஆதரவு பயங்கரவாதத்தின் தொடர்ச்சிதான்," என்று ஷெரீப் இன்று கூறியதாக APP செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதக் கூடாரம்
தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் கூடாரமாக இருக்கும் பாகிஸ்தான், நீண்ட காலமாகவே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதிகளை வளர்த்துவிடும் அதே வேளையில் இந்தியாவைக் குற்றம் சாட்டுவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது.
தற்போது, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பால் நடத்தப்படும் தாக்குதல்களையும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியுடனும் இணைத்துப் பேசும் பாகிஸ்தான், அந்த அமைப்பை "இந்தியாவின் கைப்பாவை" என்றும் கூறிவருகிறது. மேலும், TTP-யை இந்தியாவுடன் தொடர்புபடுத்தும் விதமாக, அந்த அமைப்புக்கு "பிட்னா அல் ஹிந்துஸ்தான்" என்றும் பெயரிட்டுள்ளது.
ஷெரீப் தொடர்ந்து பேசுகையில், "இந்தியாவின் ஆதரவுடன் ஆப்கான் மண்ணில் இருந்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்க வார்த்தைகளே இல்லை," என்றும் ஷெபாஸ் ஷெரீப் ஆவேசமாகக் கூறினார்.
