காஷ்மீர் விவகாரத்தில் அடிபட்ட பாம்பாக இந்தியாவை பழிதீர்க்க வழிதேடி வருகிறது பாகிஸ்தான். இந்நிலையில் உலகில் கவனத்தை ஈர்ப்பதற்காக வரும் 13-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், மஹ்மூத் ஷா குரேஷி, ’’ஜம்மு -காஷ்மீரில் நடைபெறும் பிரச்சனை இந்தியாவின் உள்விவகாரம் அல்ல. இது சர்வதேச அக்கறை கொண்ட பிரச்சனை. ஜம்மு காஷ்மீரில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே ஜம்மு -காஷ்மீரில் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் பதிலடி கொடுத்தது. 

இந்நிலையில், இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக 13-ம் தேதி பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா வசமுள்ள காஷ்மீரில் அரசுப்படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டு உள்ளதையும், அங்குள்ள மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கும் என்பதையும் உலகத்துக்கு தெரிவிக்கும் வகையில் வரும் 13-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் தலைநகர்  முசாபராபாத்தில் மாபெரும் பேரணி நடத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஆக மொத்தத்தில் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் ஊதி பெரிதாக்கி பெருத்த அடி வாங்கிக் கட்டிக் கொள்ளப்போவது உறுதி என்கிறார்கள் இந்திய ஆதரவாளர்கள்.