#UnmaskingChina: சீனாவுக்கு முன் இந்தியா ஒரு எலி...!! மானாவாரியாக கிண்டலடிக்கும் பாகிஸ்தான் நாளேடுகள்..!!
எனவே ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் இந்தியா தனது அண்டை நாடுகளை மிரட்டுவது மட்டுமல்லாமல் ராணுவ தாக்குதலையும் நடத்துவோம் என அச்சுறுத்துகிறது.
தனது அண்டை நாடுகளை எல்லாம் இந்தியா அச்சுறுத்தி வந்த நிலையில் சீனாவுக்கு முன் அதன் நிலை எலி ஆக மாறியுள்ளது, மொத்தத்தில் இந்தியா அதன் வீரத்தை பாகிஸ்தானிடத்தில் தான் காட்டும் என அந்நாட்டு ஊடகங்கள் இந்தியாவை கிண்டல் செய்து செய்தி வெளியிட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15 அன்று இரவு இருநாட்டு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனா தரப்பில் பலர் உயிரிழந்திருக்கக் கூடுமென கூறப்படுகிறது. ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக அது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையே மேலும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. மற்றொருபுறம் இருநாட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டு ஊடகங்கள் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் அதிகமாக இருந்துவரும் நிலையிலும், அதுதொடர்பான செய்திகளை புறக்கணித்துவிட்டு, இந்திய-சீன எல்லை விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இந்தியா, சீனா மோதல் குறித்து தலையங்கம் எழுதியுள்ள ஒரு உருது நாளேடு, ஜூன்-15 அன்று இந்திய ராணுவத்தின் வினோதங்களை சீனா உலகிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறது என கூறியுள்ளது. மேலும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவா லிஜியன் கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் நாளேடுகளும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன எல்லைக்குள் நுழைந்தது, இதனாலேயே இரு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது எனக் கூறி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து கட்டுரை வெளியிட்டுள்ள ஜங் என்ற உருது நாளேடு தற்போதைய சூழ்நிலையில் சீனாவுக்கு எதிரான போரில் சிக்கித்தவிக்கும் அபாயத்தை இந்தியா ஒருபோதும் எடுக்காது, அதேபோல ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் ஒருபோதும் தனது எல்லையை பாதுகாக்க அதிகாரத்தை பயன்படுத்த தயங்காது, தேவைப்படும்போது முழு அதிகாரத்தையும் சீனா பயன்படுத்தும் என தோன்றுகிறது. கடந்த சில வாரங்களாக சீனா ஹாங்காங்கில் கைது நடவடிக்கையை வலுப்படுத்தியது தைவானையும் அச்சுறுத்தியது மற்றும் தென்சீன கடலில் வியட்நாமிய கயக் மீன்பிடி துறைமுகத்தையும் எச்சரிக்கவும் தவிர்க்கவில்லை என அந்த கட்டுரை குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவும்-சீனாவும் தங்கள் 2500 மைல் எல்லையில் ஒருவருக்கொருவர் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளனர் என அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
நாவ்-இ-வக்த் என்ற செய்தித்தாளில் அலெக்சாண்டர் கான் பலூச் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை பெறும்போது அது அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறது. சீனாவை தவிர அதன் அண்டை நாடுகள் எல்லாம் ஒவ்வொரு விஷயத்திலும் அதை விட பலவீனமாக இருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம். எனவே ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் இந்தியா தனது அண்டை நாடுகளை மிரட்டுவது மட்டுமல்லாமல் ராணுவ தாக்குதலையும் நடத்துவோம் என அச்சுறுத்துகிறது. ஆனால் சீனாவுக்கு முன்னால் அது எலியைப் போல் ஆகியுள்ளது. சீன வீரர்கள் இந்திய எல்லையில் கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமைதி பற்றி பேசுகிறார். ஏனென்றால் இந்தியாவிற்கு ஒரே எதிரி பாகிஸ்தான் மட்டும்தான், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய ராணுவத் தலைவர் உள்ளிட்டோர் பாகிஸ்தானை தொடர்ந்து அச்சுறுத்துகின்றனர். இந்தியா உண்மையில் பாகிஸ்தானை தாக்குவதன் மூலம், சீனாவிடம் சந்தித்த அவமானத்தை கழுவ விரும்புகிறது. ஆனால் இது 1971 அல்ல என்பதை இந்தியா அறிந்து கொள்ள வேண்டும், பாகிஸ்தான் ராணுவம் உங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து இந்தியாவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாகிஸ்தான் நாளேடுகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.