பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டின்  புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இதனையடுத்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மையமாக வைத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இதனையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில், நவாஸ் ஷெரிப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷெபாஸ் ஷெரிப் தற்போது பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக பொறுப்பு வகிக்கிறார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் ஷெபாஸ் ஷெரிப் 45 நாட்களுக்குள் தேசிய சபையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.