பாகிஸ்தான் ரஷ்யாவுடன் ரூ.22,000 கோடி மதிப்பிலான எஃகு ஆலை நவீனமயமாக்கல் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது.
இந்தியாவுடனான தற்போதைய பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ரஷ்யாவுடன் 2.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 22,000 கோடி ரூபாய்) மதிப்பிலான முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதஆகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கராச்சியில் உள்ள எஃகு ஆலையை நவீனமயமாக்குவதற்கும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துவதற்கும் பாகிஸ்தான் - ரஷ்யா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்த இந்த ஒப்பந்தம், பாகிஸ்தானின் தொழில் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இது பாகிஸ்தானின் எஃகு உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதன் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த ஒப்பந்தம் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இந்தியாவுடனான தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தான் தனது தொழில்துறை திறன்களை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்துகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ரஷ்யாவின் மறுப்பு:
பாகிஸ்தான் ரஷ்யாவுடன் 2.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 22,000 கோடி ரூபாய்) மதிப்பிலான முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கராச்சியில் எஃகு ஆலைகளை கூட்டாக அமைக்கும் திட்டங்கள் உட்பட இஸ்லாமாபாத்துடன் பொருளாதார உறவுகளை ரஷ்யா விரிவுபடுத்துவதாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும் போலியானவை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.


